எடியூரப்பாவின் ஆதரவு-எதிர்ப்பு எம்.எல்.ஏ.க்களை மேலிட பொறுப்பாளர் இன்று சந்திக்கிறார்

முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள பரபரப்பான சூழ்நிலையில் கட்சியின் மேலிட பொறுப்பாளர் அருண்சிங், 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று(புதன்கிழமை) கர்நாடகம் வருகிறார். அவரை ஆதரவு-எதிர்ப்பு எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து கடிதம் கொடுக்கிறார்கள்.
கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது.
14 மாதங்கள் கூட்டணி
இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 14 மாதங்கள் கூட்டணி ஆட்சி நடைபெற்ற நிலையில், அக்கட்சிகளின் 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து அந்த ஆட்சி கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவர் ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகப்போகிறது. இந்த நிலையில் எடியூரப்பாவை நீக்க வேண்டும் என்று பா.ஜனதாவை சேர்ந்த சுற்றுலாத்துறை மந்திரி சி.பி.யேகேஷ்வர், எம்.எல்.ஏ.க்கள் பசனகவுடா பட்டீல், அரவிந்த் பெல்லத் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் கட்சி மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
எடியூரப்பாவை மாற்றக்கூடாது
இந்த நிலையில் பா.ஜனதா மேலிடம் விரும்பினால் முதல்-மந்திரி பதவியை விட்டு விலக தயார் என்று எடியூரப்பா அறிவித்தார். இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த மேலிட பொறுப்பாளர் அருண்சிங், முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றுவது குறித்து மேலிடம் முடிவு செய்யவில்லை என்று கூறினார். இதனால் எடியூரப்பா சற்று நிம்மதி அடைந்தார். ஆயினும் எடியூரப்பாவை மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மாற்றிக் கொள்ளவில்லை. இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங், இன்று (புதன்கிழமை) கர்நாடகம் வருகிறார். 3 நாட்கள் சுற்றுப்பயணமாக வரும் அவர், கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து ஆலோசனை நடத்துகிறார். எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ரேணுகாச்சார்யா தலைமையில் அவரை சந்தித்து, எடியூரப்பாவை மாற்றக்கூடாது என்றும், மீதமுள்ள 2 ஆண்டுகளும் எடியூரப்பாவே பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் கோரி கடிதம் அளிக்க உள்ளனர்.
பரபரப்பு
அதே போல் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தனியாக அருண்சிங்கை சந்தித்து, எடியூரப்பாவை முதல்-மந்திரியில் இருந்து நீக்க கோரிய கடிதத்தை வழங்க திட்டமிட்டுள்ளனர். மொத்தத்தில் அருண்சிங்கின் வருகை, கர்நாடக அரசியலில் குறிப்பாக பா.ஜனதாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story