தாஜ்மகாலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தாஜ்மகால் உள்ளிட்ட சுற்றுலாத்தளங்கள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா நோய் பரவல் காரணமாக பொதுமக்கள் அதிகமாக கூடும் வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதைப்போல மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள தாஜ்மகால் உள்ளிட்ட பல்வேறு நினைவுச்சின்னங்களும் மூடப்பட்டன.
கொரோனா 2-வது அலையின்போது கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் மத்திய தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றலா தலங்கள் மூடப்பட்டன. மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சுமார் 3,700 சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன.
இதற்கிடையில், வைரஸ் பரவல் கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளதையடுத்து மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் அனைத்தையும் இன்று முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், சுற்றுலாத்தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டதையடுத்து உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலக புகழ்பெற்ற தாஜ்மகால் பொதுமக்கள் பார்வைக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தாஜ்மகால் திறக்கப்பட்டுள்ளது. தாஜ்மகாலுக்குள் ஒரேநேரத்தில் 650 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும், கூடுதல் நபர்கள் தாஜ்மகாலுக்குள் நுழைய அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் தாஜ்மகால் மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்த வண்ணம் உள்ளனர்.
Related Tags :
Next Story