மும்பையில் பா.ஜனதா, சிவசேனா தொண்டர்கள் இடையே கடும் மோதல்


மும்பையில் பா.ஜனதா, சிவசேனா தொண்டர்கள் இடையே கடும் மோதல்
x
தினத்தந்தி 16 Jun 2021 9:30 PM GMT (Updated: 2021-06-17T03:00:40+05:30)

ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக மும்பையில் பா.ஜனதா, சிவசேனா தொண்டர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர்.

மும்பை, 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நிலம் வாங்கிய விவகாரத்தில் கோவில் அறக்கட்டளையில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சியினர் சமீபத்தில் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் சிவசேனா இதுதொடர்பாக வெளியிட்ட தலையங்கத்தில் கோவில் அறக்கட்டளையை கடுமையாக விமர்சித்து இருந்தது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் சிவசேனாவின் இந்த கருத்துக்கு மராட்டிய பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும் பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணியினர் நேற்று தாதரில் உள்ள சிவசேனா கட்சியின் தலைமையகமான சேனா பவனை நோக்கி ஊர்வலம் நடத்தினர்.

இந்தநிலையில் தாதர் பகுதியை ஊர்வலம் நெருங்கியபோது அங்கு வந்த சிவசேனா கட்சியினர் பா.ஜனதா போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

ஒரு கட்டத்தில் நிலைமை கைமீறி செல்வதை கண்ட போலீசார் அவர்களை கலைந்து போக எச்சரித்தனர். ஆனால் போலீசார் முன்னிலையில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

Next Story