எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது: மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே

பிரசாந்த் கிஷோர்- சரத்பவார் சந்தித்து பேசிய நிலையில் மிஷன் 2024 தொடர்பான எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது என்று மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.
பிரசாந்த் கிஷோர்
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் முக்கியத்துவம் பெற்றன. இங்கு தி.மு.க. மற்றும் திரிணாமுல் காங்கிரசுக்காக பிரசார வியூகம் அமைத்தவர், அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர். தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகப் போவதாகவும், அரசியல் வியூகப் பணியில் ஈடுபடும் தனது ஐபேக் நிறுவனத்தை அதில் உள்ள மற்ற நண்பர்கள் நடத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மிஷன்-2024
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் பிரசாந்த் கிஷோர் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மிஷன்-2024 எனப்படும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலை ஒட்டிய திட்டமிடல் என தகவல் வெளியானது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை எதிர்த்து வலிமையுடன் போராட எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள்வது பற்றியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின.
இதுகுறித்து இந்திய குடியரசு கட்சித் தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது:-
பலிக்காது
2019 நாடாளுமன்ற தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் துணையின்றி தான் பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக 304 இடங்களில் வெற்றி பெற்றது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் தலைமைக்கே மக்கள் ஆதரவளிப்பார்கள். பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்பார். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இல்லை. எனவே எதிர்க்கட்சிகளின் கனவு எதுவும் பலிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story