எடியூரப்பாவை மாற்றுவது குறித்து விவாதிக்கவில்லை: பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் பேட்டி

முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றுவது குறித்து விவாதிக்கவில்லை என்றும், கட்சி கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் கூறினார்.
பெங்களூருவில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் சந்திப்புக்கு பிறகு மேலிட பொறுப்பாளர் அருண்சிங் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஆலோசனை நடத்தினோம்
என்னை எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றி வரும் சேவைகள், கட்சியை பலப்படுத்த அவர்கள் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து
கேட்டறிந்தேன். எம்.எல்.ஏ.க்கள் பகல் இரவாக மக்களுக்கு சேவையாற்றுவதாக கூறினர். இதை கேட்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றுவது குறித்து விவாதிக்கவில்லை. யோகா தினம், ஷாம்பிரசாத் முகர்ஜி பிறந்த தின விழாக்கள் நடைபெற உள்ளன. அதுகுறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். பிரதமர் மோடி, முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோரின் ஆட்சியின் நலத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினேன். தங்களின் தொகுதிகளில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் செல்வாக்கு இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
நற்பெயருக்கு களங்கம்
கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்கள். இந்த பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினேன். எங்கள் கட்சியில் ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் கூறும் கருத்துகள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது. அவற்றை எங்கள் கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் மற்றம் நிர்வாகிகள் கவனித்து வருகிறார்கள். அவர்கள் ஆதாரங்களை திரட்டி வருகிறார்கள். கட்சி கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அருண்சிங் கூறினார்.
Related Tags :
Next Story