தேசதுரோக வழக்கு: நேரில் ஆஜராக நடிகை ஆயிஷா சுல்தானாவுக்கு லட்சத்தீவு போலீசார் நோட்டீஸ்

தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நடிகை ஆயிஷா சுல்தானா லட்சத்தீவு போலீசில் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
லட்சத்தீவு,
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள லட்சத்தீவுகளின் நிர்வாக தலைவராக பிரபுல் ஹோடா படேல் செயல்பட்டுவருகிறார். பிரபுல் ஹோடா படேல் தலைமையிலான நிர்வாகம் லட்சத்தீவில் பல்வேறு சட்டத்திருத்தங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஆனால், லட்சத்தீவுகளில் பெரும்பான்மை மக்கள் தொகையாக இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் உள்ள நிலையில் நிர்வாகத்தின் சீர்திருத்தங்களுக்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பிர்புல் ஹோடா படேலை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை வலுத்துவருகிறது.
இதற்கிடையில், லட்சத்தீவு விவகாரம் குறித்து கேரளாவில் உள்ள பிரபல செய்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரளாவின் பிரபல பெண் டைரக்டரும், நடிகையும், சமூகசெயற்பாட்டாளருமான ஆயிஷா சுல்தானா பங்கேற்றார்.
லட்சத்தீவுகளில் ஒன்றான ஷட்லட் தீவை சேர்ந்த ஆயிஷா சுல்தானா கேரளாவில் வசித்து வரும் நிலையில் அந்த விவாத நிகழ்ச்சியின்போது, கொரோனா வைரசை லட்சத்தீவு மக்களுக்கு எதிராக உயிரி ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்துகிறது. பிரபுல் ஹோடா படேலை மத்திய அரசு உயிரி ஆயுதமாக பயன்படுத்துகிறது என கூறினார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆயிஷா சுல்தானா மீது லட்சத்தீவு போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஆயிஷா சுல்தானா முன் ஜாமீன் கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த கேரள ஐகோர்ட்டு ஆயிஷா சுல்தானா கைது செய்யப்படாமல் இருக்கும் வகையில் அவருக்கு ஒருவாரம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு மற்றும் லட்சத்தீவு நிர்வாகியை உயிரி ஆயுதம் என கூறிய விவகாரத்தில் விசாரணைக்கு நாளை (திங்கட்கிழமை) நேரில் ஆஜராகும் படி ஆயிஷா சுல்தானாவுக்கு லட்சத்தீவு போலீசார் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி லட்சத்தீவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆயிஷா சுல்தானா, நான் லட்சத்தீவு போலீசாரின் விசாரணைக்கு எனது முழு ஒத்துழைப்பையும் அளிப்பேன். நாளை என்னை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன். நாட்டிற்கு எதிராக நான் எதையும் செய்யவில்லை. லட்சத்தீவுக்கு நீதி கிடைக்கும் வரை நான் போராடுவேன்’ என்றார்.
Related Tags :
Next Story