டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு மேலும் குறைந்தது


டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு மேலும் குறைந்தது
x
தினத்தந்தி 21 Jun 2021 3:52 PM IST (Updated: 21 Jun 2021 3:52 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் கொரோனா தொற்று விகிதம் 0.16 சதவிகிதமாக குறைந்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரசின் 2-வது அலையில் மிகக்கடுமையான பாதிப்பை டெல்லி எதிர்கொண்டது. ஏப்ரல் மாத இறுதியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 28 ஆயிரத்தை தாண்டியது. இதனால், டெல்லி மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியது. கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர டெல்லி அரசு கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியது.

இதன் பலனாக டெல்லியில் மெல்ல மெல்ல கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரத்தொடங்கியது.  கடந்த சில வாரங்களாக டெல்லியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு சீராக சரிந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது.  தொற்று பரவல் குறைந்ததால் தற்போது,  ஊரடங்கில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில்  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 89- ஆக குறைந்துள்ளது. அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, தொற்று பாதிப்பில் இருந்து நேற்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 173- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 11- பேர் உயிரிழந்துள்ளனர்.  

டெல்லியில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,996- ஆக குறைந்துள்ளது. டெல்லியில் கொரோனா தொற்று விகிதம் 0.16 சதவிகிதமாக குறைந்துள்ளது. 57,128- மாதிரிகள் கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.


Next Story