கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை: அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை - மத்திய அரசு உறுதி

ஆண்கள் அல்லது பெண்களிடம் தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான ஆதாரம் இல்லை என மத்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுவதாக சமீப காலமாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதை மத்திய அரசு மறுத்துள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சகம் கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசி, ஆண்கள் மற்றும் பெண்களில் கருவுறாமைக்கு (மலட்டுத்தன்மை) வழிவகுப்பதாக அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை. மாறாக இந்த தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளது. தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுவதாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள ஊழியர்களின் ஒரு பிரிவினரிடம் கட்டுக்கதை பரவி வருவதாக கூறியுள்ள சுகாதார அமைச்சகம், இத்தகயை தவறான தகவல்கள் போலியோ சொட்டு மருந்து மற்றும் தட்டம்மை தடுப்பூசி போன்றவற்றின் மீதும் கூறப்பட்டதாகவும், ஆனால் அவற்றில் உண்மை இல்லை எனவும் தெரிவித்து உள்ளது.
தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உறுதி செய்யப்பட்ட பிறகே அவற்றை பயன்பாட்டுக்கு அனுமதித்து இருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
Related Tags :
Next Story