இரு வேறு சமூகத்தை சேர்ந்த காதலர்கள் படுகொலை - பெண்ணின் குடும்பத்தினர் வெறிச்செயல்


இரு வேறு சமூகத்தை சேர்ந்த காதலர்கள் படுகொலை - பெண்ணின் குடும்பத்தினர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 25 Jun 2021 5:39 PM GMT (Updated: 2021-06-26T08:00:38+05:30)

இரு வேறு சமூகத்தை சேர்ந்த காதலர்கள் பெண்ணின் குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தை சலடஹில் என்ற கிராமத்தை சேர்ந்த 19 வயது இளைஞன் பசவராஜ் மடிவலபா படிகர். தலித் சமூதாயத்தை சேர்ந்த இந்த இளைஞரும் அதே ஊரை சேர்ந்த டவால்பி பந்தகிசாப் என்ற 18 வயது நிரம்பிய இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த இளம்பெண்ணும் வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வந்துள்ளனர்.

இருவரின் காதல் விவகாரம் டவால்பி பந்தகிசாப்பின் குடும்பத்திற்கு தெரிந்ததையடுத்து தனது வீட்டு பெண்ணை விட்டு விலகும்படி பெண்ணின் குடும்பத்தினர் பசவராஜ் மடிவலபா படிகருக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளனர். ஆனால், வீட்டிற்கு தெரியாமல் காதலர்கள் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளனர். 

இந்நிலையில், நேற்று முன்தினம் பசவராஜ் மடிவலபா படிகர், டவால்பி பந்தகிசாப் உடன் வயல்வெளியில் தனியாக இருப்பதை அந்த பெண்ணின் குடும்பத்தினர் பார்த்து இது குறித்து டவால்பி பந்தகிசாப்பின் தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த டவால்பி பந்தகிசாப்பின் தந்தை தனது டவால்பி பந்தகிசாப்பின் சகோதர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வயல்வெளிக்கு விரைந்து வந்தனர். அங்கு பசவராஜ் மடிவலபா படிகர் மற்றும் டவால்பி பந்தகிசாப் பேசிக்கொண்டிருந்ததை கண்டு ஆத்திரத்தில் இருவரையும் கடுமையாக தாக்கினர்.

காதலர்கள் இருவரையும் கயிற்றால் கட்டி கத்தியால் குத்தியுள்ளனர். மேலும், காதலர்கள் இருவர் தலையிலும் கல்லைப்போட்டு கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்.

தனது மகன் பசவராஜ் மடிவலபா படிகர் தாக்கப்படுவதை அறிந்த அவனின் தாயார் வயல்வெளிக்கு விரைந்து சென்று தனது மகனை விட்டுவிடும்படி கெஞ்சியுள்ளார். ஆனால், டவால்பி பந்தகிசாப்பின் குடும்பத்தினர் காதலர்கள் இருவர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தினர். தலையில் கல்லைப்போட்டும், கத்தியால் குத்தியும் நடத்திய தாக்குதலில் பசவராஜ் மடிவலபா படிகர் மற்றும் டவால்பி பந்தகிசாப் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காதலர்களை கொலை செய்த டவால்பி பந்தகிசாப்பின் குடும்பத்தினர் அங்கிருந்து உடனடியாக தப்பியோடிவிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகொலை செய்யப்பட்ட பசவராஜ் மடிவலபா படிகர் மற்றும் டவால்பி பந்தகிசாப்பின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் காதலர்களை கொலை செய்த பெண்ணின் தந்தை, சகோதரன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என மொத்தம் 4 பேரை இன்று கைது செய்துள்ளனர். 

கொலையில் தொடர்புடைய மேலும் ஒரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். காதலர்கள் பெண்ணின் குடும்பத்தினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story