சண்டிகரில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டிராக்டர் பேரணி


சண்டிகரில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டிராக்டர் பேரணி
x
தினத்தந்தி 26 Jun 2021 8:53 PM GMT (Updated: 2021-06-27T02:23:41+05:30)

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து சண்டிகரில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சண்டிகர்,

வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் 3 புதிய சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு நிறைவேற்றியது. இந்த சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என உறுதிபட தெரிவித்தும் வருகிறது.

ஆனால் இந்த சட்டங்கள் விவசாயத்தை கார்பரேட் வசமாக்கி விடும் என அச்சம் தெரிவித்து வரும் விவசாயிகள், இந்த சட்டங்களை திரும்பப்பெறுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அத்துடன் குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்கவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சட்டங்களை வாபஸ் பெறக்கோரி கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் காசிப்பூர், திக்ரி, சிங்கு ஆகிய எல்லைப்பகுதிகளை முற்றுகையிட்டு உள்ளனர்.

இந்த விவசாயிகளுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித பலனும் ஏற்படவில்லை. சட்டங்களை திரும்பப்பெறும் கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால், இந்த பிரச்சினையில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.

அதேநேரம் தங்கள் போராட்டத்தை முழு மூச்சுடன் நடத்தி வரும் விவசாயிகள், பல்வேறு சிறப்பு தினங்களின்போது மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பு போராட்டங்களையும் மேற்ெகாண்டு வருகின்றனர்.

அந்தவகையில் டெல்லி எல்லைகளில் போராட்டம் தொடங்கி நேற்றுடன் 7 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இதை நினைவுகூரும் வகையில் நேற்று ஒவ்வொரு மாநிலங்களிலும் கவர்னர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

அதன்படி சண்டிகரில் உள்ள பஞ்சாப், அரியானா மாநில கவர்னர் மாளிகைக்கு அந்தந்த மாநில விவசாயிகள் பேரணியாக சென்றனர். இதற்காக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மொகாலியில் உள்ள குருத்வாராவில் ஒன்று கூடினர்.

பின்னர் அங்கிருந்து டிராக்டர்கள் போன்ற வாகனங்களிலும், கால்நடையாகவும் சண்டிகர் கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். வேளாண் சங்க தலைவர் பல்பிர் சிங் ராஜிவால் தலைமையில் புறப்பட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள், தங்கள் அமைப்பின் கொடிகளை கைகளில் ஏந்தியவாறு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

இவர்கள் செல்லும் வழியில் பல இடங்களில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து பேரணியை தடுக்க முயன்றனர். ஆனால் அவற்றை கடந்து சென்ற விவசாயிகள் மொகாலி-சண்டிகர் எல்லையை அடைந்தனர்.

அங்கு தடுப்பு வேலிகள் மற்றும் ஏராளமான பஸ்களை சாலையின் குறுக்கே நிறுத்தி விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆனால் அந்த வேலிகளை கடந்து விவசாயிகள் முன்னேற முயன்றனர்.

உடனே அவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து திரும்பிச்செல்ல வலியுறுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பஞ்சாப் கவர்னருக்கு அளிப்பதற்காக கொண்டு சென்ற மனுவை, சண்டிகர் துணை கமிஷனரிடம் ராஜிவால் கொடுத்து, கமிஷனரிடம் ஒப்படைக்க கோரினார்.

இதைத்தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் அங்கிருந்து திரும்பி சென்றனர். விவசாயிகளின் இந்த பேரணியால் மொகாலியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருந்தது.

இதற்கிடையே அரியானாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பஞ்ச்குலாவில் உள்ள குருத்வாரா ஒன்றில் ஒன்றுகூடி அங்கிருந்து சண்டிகரை நோக்கி புறப்பட்டனர்.

விவசாய அமைப்பு தலைவர்களான குர்னம் சிங் சதுனி, யோகேந்திர யாதவ் ஆகியோர் தலைமையில் புறப்பட்ட இந்த பேரணியையும் பல இடங்களில் போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.

அவர்களும் சண்டிகர் எல்லையை அடைந்தனர். அங்கு பல அடுக்கு வேலிகளால் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். எனவே அவர்களும் அங்குள்ள உயர் அதிகாரி ஒருவரிடம் அரியானா கவர்னரிடம் ஒப்படைப்பதற்கான மனுவை அளித்து விட்டு திரும்பி சென்றனர்.

இரு மாநில விவசாயிகளின் இந்த பேரணி மற்றும் போராட்டங்களால் சண்டிகரில் நேற்று பெரும் பரபரப்பு நிலவியது.

இதற்கிடையே நாடு முழுவதும் பல்வேறு மாநில தலைநகரங்களில் கவர்னர் மாளிகைக்கு முன் விவசாயிகள் போராட்டம் நடத்தியதாக விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா கூறியுள்ளது.

இது தொடர்பாக பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் கூறுகையில், ‘விவசாயிகள் 7 மாதங்காக போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு எங்கள் கோரிக்கைக்கு செவிமடுக்கவில்லை. ஆனால் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்’ என்று தெரிவித்தார்.

முன்னதாக டெல்லி துணைநிலை கவர்னர் அனில் பைஜாலுடன் மெய்நிகர் முறையில் சந்திப்பு நடத்திய விவசாயிகள், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் ஒப்படைப்பதற்காக துணை போலீஸ் கமிஷனரிடம் வழங்கினர்.

Next Story