அரியானாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5-ந்தேதி வரை நீட்டிப்பு


அரியானாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5-ந்தேதி வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 27 Jun 2021 3:24 PM GMT (Updated: 27 Jun 2021 3:24 PM GMT)

அரியானாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரியானா,

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் குறைந்து வருகிறது. இதனால், தொற்று பாதிப்பு அதிகரித்த போது ஊரடங்கு கட்டுப்பாடுகளை கொண்டு வந்த மாநிலங்கள், தற்போது பாதிப்பு குறையத்தொடங்கியதையடுத்து, படிப்படியாக தளர்த்தத் தொடங்கியுள்ளன.  

அந்தவகையில்,  அரியானாவிலும் ஊரடங்கு தளர்வுகளுடன் மேலும் ஒருவாரத்திற்கு அதாவது ஜூன் 28-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், அரியானாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 5 வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்விவரம் பின்வருமாறு:-

அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகின்றன. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மால்கள் திறக்க அனுமதிக்கப்படுகிறது. 50 சதவீத இருக்கையுடன் உணவகங்கள் மற்றும் பார்கள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது. 

ஹோட்டல் மற்றும் உணவகங்களில் இருந்து இரவு 10 மணி வரை உணவு டெலிவரிக்கு அனுமதிக்கப்படுகிறது. மத வழிபாட்டுத் தலங்களில் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. கார்ப்பரேட் அலுவலகங்கள் நூறு சதவீதம் பேருடன் இயங்க அனுமதிக்கப்படுகின்றன. திருமணங்களில் கூட்டங்கள், இறுதி சடங்குகளில் 50 பேர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றன. 

திருமண ஊர்வலங்களுக்கு அனுமதி கிடையாது. உடற்பயிற்சி கூடங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Next Story