இளைய சகோதரி மம்தா பானர்ஜிக்கு எதிராக செயல்பட மாட்டேன் -மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தங்கர்
இளைய சகோதரி மம்தா பானர்ஜிக்கு எதிராக செயல்பட மாட்டேன் என மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தங்கர் கூறி உள்ளார்.
கொல்கத்தா
மேற்கு வங்காளத்தில் கவர்னராக ஜெகதீப் தங்கர் பதவியேற்று 3 ஆண்டுகள் ஆகிறது. கவர்னராக தங்கர் நியமிக்கப்பட்டது முதல் மம்தா பானர்ஜிக்கும் கவருனருக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. தற்போது இந்த மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் கொல்கத்தாவில் வன்முறை வெடித்தது. இதில் ஏராளமான கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இது குறித்து கவர்னர் மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்து கடிதம் எழுதியிருந்தார்.
மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் கவர்னர் ஜெக்தீப் தங்கர் இது தொடர்பாக கடிதம் எழுதினார். இதையடுத்து கவர்னரை திரும்ப பெறும்படி மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திரமோடிக்கு மூன்று முறை கடிதம் எழுதியுள்ளார். மேற்கு வங்காள சட்டமன்றம் வரும் ஜூலை 2-ம் தேதி கூடுகிறது. இதில் உரையாற்றுவதற்காக கவர்னருக்கு மாநில அரசு தயாரித்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அது குறித்து மம்தா பானர்ஜியுடன் விவாதிக்கவேண்டும் என்று கவர்னர் தங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கவர்னர் அரசு எழுதிக்கொடுக்கும் அனைத்தையும் படிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அரசியல் சாசனத்திற்கு எதிராக இருந்தால் அதனை நான் வாசிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். இதனால் மம்தா பானர்ஜி வெகுண்டெழுந்துள்ளார். கவர்னர் ஜெக்தீப் தங்கர் ஒருஊழல் பேர்வழி என்றும், 1990ல் பரபரப்பை ஏற்படுத்திய ஜெயின் ஹவாலா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். ஏன் இது போன்ற ஊழல்வாதிகளை மத்திய அரசு கவர்னராக அனுமதிக்கிறது என கேள்வி எழுப்பினார்.
மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த கவர்னர் தங்கர் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது. எனது பெயர் எந்த குற்றப்பத்திரிக்கையிலும் இடம் பெறவில்லை. அது போன்ற ஒரு ஆவணம் இல்லை. இது உண்மைக்கு மாறானது. முற்றிலும் தவறான தகவல். அனுபவமுள்ள அரசியல்வாதியிடமிருந்து இது போன்ற ஒரு குற்றச்சாட்டை எதிர்பார்க்கவில்லை என கூறி உள்ளார்.
இதற்கிடையில் கவர்னர் செவ்வாய்க்கிழமை ராஜ் பவனில் முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.
மம்தா பானர்ஜி மீதான குற்றச்சாட்டுகளுக்கு இன்று பதிலளித்த மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தங்கர் எனது இளைய சகோதரிக்கு மீது நடவடிக்கை எடுக்க இந்திய கலாச்சாரம் அனுமதிக்கவில்லை. நான் எந்த சூழ்நிலையிலும் பதற்றமடைய மாட்டேன். மேற்கு வங்காள மக்களுக்கு சேவை செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என கூறினார்.
Related Tags :
Next Story