தமிழக அரசின் 2019-ம் ஆண்டு நில கையகப்படுத்தல் சட்டம் செல்லும்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு


தமிழக அரசின் 2019-ம் ஆண்டு நில கையகப்படுத்தல் சட்டம் செல்லும்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 29 Jun 2021 8:15 PM GMT (Updated: 29 Jun 2021 8:15 PM GMT)

தமிழக அரசின் 2019-ம் ஆண்டு நில கையகப்படுத்தல் சட்டம் செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

மத்திய, மாநில அரசு சட்டங்கள்
அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் தனியார் நிலங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கும் வகையில், நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு என்ற சட்டத்தை மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு கொண்டுவந்தது.இந்த புதிய சட்டத்தில் இருந்து, மாநில அரசின் நில கையகப்படுத்தல் சட்டங்களான மாநில நெடுஞ்சாலைகள் சட்டம், தொழில் பயன்பாட்டுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் மற்றும் அரிஜன் நல சட்டம் ஆகிய சட்டங்களை பாதுகாக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு தமிழக அரசு 105(ஏ) என்ற சட்டப்பிரிவைச் சேர்த்து நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு சட்டத்தைக் கொண்டுவந்தது.

ஐகோர்ட்டு உத்தரவு
மத்திய அரசு சட்டம் கொண்டுவந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் செல்லாது என அறிவிக்க கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருணாநிதி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தாக்கல் செய்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு விசாரித்தது.நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக 2015-ம் ஆண்டு தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது, இந்த சட்டத்தின்கீழ் 2013-க்கு பின் மேற்கொள்ளப்பட்ட நிலம் கையெடுப்பு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த 3 நில கையகப்படுத்தல் சட்டங்களின் கீழ், 2013-க்கு பின் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்ட நிலம் கையகப்படுத்தல் நடவடிக்கைகளை ரத்து செய்தும் தீர்ப்பளித்தது. இப்பணிகள் முடிவடைந்திருந்தால் இந்த தீர்ப்பு பொருந்தாது எனவும், செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு மட்டுமே இந்த தீர்ப்பு பொருந்தும் எனவும் தெளிவுபடுத்தியது.

இடைக்கால தடை
இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த 2019, செப்டம்பர் 27-ந்தேதி விசாரணையில், சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்களை விசாரிக்கவும் ஐகோர்ட்டுக்கு தடை விதித்தது. மேலும் தமிழக அரசின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு, வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

பொதுநல மனுக்கள்
இதற்கிடையே, ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட சட்டத்தை உயிர்ப்பிக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்தது. இந்த சட்டத்துக்கு எதிராக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.மோகன் ராவ் உள்ளிட்ட 55 பேர் தாக்கல் செய்த பொதுநல மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

தமிழக அரசு வாதம்
கடந்த பிப்ரவரி 23-ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது தமிழக அரசின் சார்பில் தலைமை வக்கீல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி, இந்த வழக்கில் ரிட் மனுதாரர்கள் விவசாயிகள் என்ற பெயரிலும், மாநில அரசு தங்களை 
சுரண்டிவருவதாகவும் தெரிவித்து கோர்ட்டை தவறாக வழிநடத்துகின்றனர். மனுதாரர்களுக்கு உரிய இழப்பீட்டை மாநில அரசு வழங்கியுள்ளது. சாலை, விமான நிலைய விரிவாக்கத் திட்டங்களுக்கு கையகப்படுத்தும் நிலங்களுக்கு 
தடைகளை ஏற்படுத்தினால் திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும். நாட்டின் பொருளாதாரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகளின் அவசியத்தை சுப்ரீம் கோர்ட்டு எட்டு வழிச்சாலை வழக்கில் சுட்டிக்காட்டியுள்ளது. ரத்து செய்யப்பட்ட சட்டத்தை உயிர்ப்பிக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் புதிய சட்டம் செல்லும் என வாதிட்டார்.

விவசாயிகள் பாதிப்பு
ரிட் மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் தனியார் நிலங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கும் வகையில், நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உள்ளிட்டவை மத்திய அரசு சட்டத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால், இவை மாநில அரசு சட்டத்தில் இல்லை. இதுபோன்ற முரண்பட்ட சட்டங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கும் சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடரமுடியும் என வாதிட்டார்.இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

நில கையகப்படுத்தல் சட்டம் செல்லும்
இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, மனுதாரர்களின் வாதங்களை ஏற்க முடியாது. மாநில அரசின் உரிமைக்கு உட்பட்டு இருப்பதாலும், சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படி இருப்பதாலும், தமிழ்நாடு அரசின் 2019-ம் ஆண்டு நில கையகப்படுத்தல் சட்டம் செல்லும். எனவே, இதற்கு எதிரான எதிரான ரிட் மனுக்களை தள்ளுபடி செய்கிறோம் என தெரிவித்தது.

Next Story