மராட்டிய துணை முதல்-மந்திரிக்கு தொடர்புடைய ரூ.65 கோடி சொத்துகள் முடக்கம் அமலாக்கத்துறை அதிரடி

துணை முதல்-மந்திரி அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.65 கோடி மதிப்பிலான சர்க்கரை ஆலை சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
மும்பை,
துணை முதல்-மந்திரி அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.65 கோடி மதிப்பிலான சர்க்கரை ஆலை சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
மாநில கூட்டுறவு வங்கி ஊழல்
மராட்டியத்தில் செயல்பட்டு வரும் மஹாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியில், 2007 முதல் 2012-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், கடன் வழங்கியது உள்ளிட்ட விஷயங்களில், ரூ.1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக கடந்த 2019-ம் ஆண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கை அடிப்படையாக வைத்து சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி நடந்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், துணை முதல்-மந்திரியுமான அஜித் பவார், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்க துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த ஊழலில் உரிய ஆவணங்கள் இன்றி கடன் வழங்கியது, குறைந்த விலைக்கு சர்க்கரை ஆலை சொத்துகளை விற்றது என பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு இருந்தன.
ரூ.65 கோடி சர்க்கரைஆலை
இந்தநிலையில் கூட்றவு வங்கி ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை சத்தாரா மாவட்டத்தில் சிமன்காவ் - கோரேகாவ் பகுதியில் உள்ள ரூ.65 கோடி மதிப்பிலான சர்க்கரை ஆலையின் சொத்துகளை முடக்கி உள்ளனர்.
இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முறையான விதிகளை பின்பற்றாமல் அதிகாரிகள், மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி இயக்குனர்களால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் தனியாருக்கு சர்க்கரை ஆலையை குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அப்போது அஜித்பவார் மாநில கூட்டுறவு வங்கியின் சக்திவாய்ந்த இயக்குனர்களில் ஒருவராக இருந்து உள்ளார். குறைந்த விலைக்கு விற்கப்பட்ட சர்க்கரை ஆலை சொத்துகளை காட்டி மாநில கூட்டுறவு வங்கியில் ரூ.700 கோடி கடன் வாங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து சர்க்கரை ஆலை சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story