கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மாநிலங்களுக்கு மத்தியக்குழு விரைகிறது

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் 2-வது அலை உச்சம் பெற்று சரியத்தொடங்கியுள்ளது. எனினும், சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை உச்சம் பெற்று தற்போது வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இறங்கு முகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. ஆனால், கேரளா, அருணாசல பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஷ்கர் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கேரளாவில் தொற்று பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் தொடர்ந்து காணப்படுகிறது.
இந்த நிலையில், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மேற்கண்ட 6 மாநிலங்களுக்கும் மத்தியக்குழுவை மத்திய சுகாதாரத்துறை அனுப்பி வைத்துள்ளது. இரு நபர்கள் கொண்ட குழுவில் ஒரு மருத்துவம் மற்றும் பொது சுகாதார நிபுணர்கள் இடம்பெற்று உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் கூறுகையில், மத்தியக் குழுவினர் உடனடியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சென்று, பரிசோதனை, கண்காணிப்பு உள்ளிட்ட கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கும். மருத்துவமனைகளில் படுக்கைகள் இருப்பு, ஆம்புலன்ஸ், வென்டிலேட்டர், மருத்துவ ஆக்சிஜன் இருப்பு குறித்து ஆய்வு செய்யும். கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிப்பதுடன் தேவையான ஆலோசனைகளையும் வழங்கும்” என்று தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story