ஆணவத்துக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது; ராகுல்காந்திக்கு மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன் பதில்


ஆணவத்துக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது; ராகுல்காந்திக்கு மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன் பதில்
x
தினத்தந்தி 2 July 2021 8:29 AM GMT (Updated: 2 July 2021 8:29 AM GMT)

ஆணவத்துக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது. காங்கிரஸ் கட்சி தங்கள் தலைமையை மாற்றுவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என ராகுல்காந்திக்கு சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதிலடி கொடுத்துள்ளார்.

புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது 34 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனினும் சில மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனை குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்து இருந்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் : இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்குகிறது. தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மாநில அரசுகளுக்கு 15 நாட்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் கொரோனா காலத்தில் சில தலைவர்கள், அநாகரிக அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தலைவர்களுக்கு அனைத்து விவரங்களும் தெரியும். ஆனால் அர்த்தமற்ற அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்’’ எனக் கூறியிருந்தார்.

இந்தநிலையில் ராகுல் காந்தி இன்று காலை மீண்டும் தடுப்பூசி விவகாரம் தொடர்பாக மத்திய அரசை விமர்சித்து இருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில் ‘‘ஜூலை வந்து விட்டது, தடுப்பூசி வரவில்லை. எங்கே தடுப்பூசி’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஹர்ஷ் வர்தன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி தகவல்கள் குறித்து நான் ஏற்கெனவே தகவல்களை வெளியிட்டு இருந்தேன். ராகுல் காந்திக்கு என்ன தான் பிரச்சினை?

அவர் அந்த தரவுகளை பார்க்கவில்லையா? ஆணவத்துக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது. காங்கிரஸ் கட்சி தங்கள் தலைமையை மாற்றுவது குறித்து ஆலோசிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.



Next Story