அமலாக்கத்துறையால் முடக்கப்பட்ட சர்க்கரை ஆலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது: அஜித்பவார்


அமலாக்கத்துறையால் முடக்கப்பட்ட சர்க்கரை ஆலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது: அஜித்பவார்
x
தினத்தந்தி 2 July 2021 8:21 PM GMT (Updated: 2 July 2021 8:21 PM GMT)

அமலாக்கத்துறையால் முடக்கப்பட்ட சர்க்கரை ஆலைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறினார்.

தொடர்பு இல்லை
மஹாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையினர் சத்தாராவில் உள்ள ரூ.65 கோடி மதிப்பிலான சர்க்கரை ஆலையின் சொத்துகளை முடக்கியது. மாநில துணை முதல்-மந்திரி அஜித்பவார், அவரது மனைவிக்கு இந்த ஆலையுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கையகப்படுத்தப்பட்ட சர்க்கரை ஆலைக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அஜித் பவார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மாநில கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் சர்க்கரை ஆலை உள்ளிட்ட 14 மில்கள் விற்பனை செய்யப்பட்டது. சா்க்கரை ஆலையை விற்பனை செய்ய டெண்டர் விட்டோம். அதற்கு 15 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து இருந்தன. இதில் குரு கமாடிட்டி நிறுவனம் அந்த சர்க்கரை ஆலையை ரூ.65.75 கோடிக்கு வாங்கியது. எனக்கு தெரிந்தவரை 
நஷ்டத்தில் ஓடும் சர்க்கரை ஆலை இந்த விலைக்கு போனது கிடையாது.

விரிவாக்கம்

இந்தநிலையில் குரு நிறுவனம் மீண்டும் ஆலையை குத்தகைக்கு ஏற்கனவே அதை நடத்தி வந்தவர்களுக்கு கொடுத்தது. அதன்பிறகும் ஆலை நஷ்டத்தில் தான் ஓடியது. இந்தநிலையில் எனது உறவினரான ராஜேந்திர கட்கே சர்க்கரை ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தினார். அப்போதும் சில ஆண்டுகள் ஆலை நஷ்டத்தில் தான் ஓடியது. எனது உறவினருக்கும் கூட குரு நிறுவனத்துடன் எந்த தொடர்பும் கிடையாது. அதன்பிறகு சர்க்கரை ஆலை நிர்வாகம் அதை வங்கியில் கடன்வாங்கி விரிவுப்படுத்தியது. 1 லட்சம் லிட்டர் கொள்ளவு காய்ப்பான் அமைக்கப்பட்டது. இதனால் சர்க்கரை உற்பத்தி 10 ஆயிரம் மெட்ரிக் டன்னாக அதிகரித்து உள்ளது.

அரசியல் நடக்கிறது
இந்த வழியில் தான் தற்போது அந்த ஆலை நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. கடனையும் சரியாக செலுத்தி வருகிறது. எனக்கும் குரு நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லாத போது, அதை ஏன் அமலாக்கத்துறை விசாரிக்கிறது என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ஏற்கனவே சி.ஐ.டி., லஞ்ச ஒழிப்புதுறை, பொருளாதார குற்றப்பிரிவினர் விசாரணை நடத்தி விட்டனர். ஆனால் அவர்களிடம் இருந்து எதுவும் வெளிவரவில்லை. தற்போது நாட்டில் எந்த வகையான அரசியல் நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். நீதி கிடைக்கும் சில இடங்களும் 
உள்ளன. சர்க்கரை ஆலை நிர்வாகம் அங்கு செல்ல முயற்சி செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story