வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்றத்துக்கு வெளியே தினந்தோறும் போராட்டம்: விவசாய கூட்டமைப்பு

விவசாய சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்றத்துக்கு வெளியே தினந்தோறும் 200 பேர் போராட்டம் நடத்துவோம் என்று விவசாய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தினந்தோறும் போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, டெல்லி எல்லையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இந்தநிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 40 விவசாய சங்கங்கள் அடங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற கூட்டமைப்பு சார்பில் விவசாய தலைவர் பல்பீர்சிங் ராஜேவால் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:-
மழைக்கால கூட்டத்தொடரின்போது, வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபடுவோம். ஒரு விவசாய சங்கத்துக்கு 5 பேர் வீதம் 40 சங்கங்களை சேர்ந்த 200 விவசாயிகள் தினந்தோறும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை போராட்டம் நீடிக்கும்.
சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தம்
அதுபோல், இந்த சட்டங்களை ரத்து செய்யும் கோரிக்கையை சபைக்குள் தினந்தோறும் எழுப்புமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்களை வலியுறுத்துவோம். இதற்காக, கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு எச்சரிக்கை கடிதம் கொடுப்போம். பிரச்சினைக்கு தீா்வு காணும் வரை சபையை நடத்த விடக்கூடாது, வெளிநடப்பு செய்யக்கூடாது என்று அவர்களிடம்
கூறுவோம்.மேலும், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை எதிர்த்து, வருகிற 8-ந் தேதி நாடுதழுவிய போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளோம். அதன்படி, டிராக்டர், டிராலி, கார், ஸ்கூட்டர் என எந்த வாகனம் வைத்திருந்தாலும், அதை அருகில் உள்ள மாநில, தேசிய நெடுஞ்சாலைக்கு ஓட்டி வந்து சாலையோரத்தில் நிறுத்தி வைக்க வேண்டும்.
பேச்சுவார்த்தை உண்டா?
காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை வாகனங்களை நிறுத்திவைக்க வேண்டும். 12 மணிக்கு வாகனங்களின் ஒலியை எழுப்ப வேண்டும். மொத்தம் 8 நிமிட நேரத்துக்கு ஒலி எழுப்ப வேண்டும். அதுபோல், பெண்கள் அனைவரும் கியாஸ் சிலிண்டர்களை நெடுஞ்சாலைக்கு தூக்கி வந்து போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.மத்திய மந்திரி தோமர்,பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
விடுத்துள்ளார். ஆனால், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய சம்மதித்தால் தான் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story