மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்கிறது - கர்நாடக மந்திரி குற்றச்சாட்டு

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்கிறது என கர்நாடக மந்திரி குற்றஞ்சாட்டி உள்ளார்.
பெங்களூரு
தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக வனப்பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே எரகோள் என்னும் இடத்தில் கர்நாடக அரசு தடுப்பணையை கட்டியுள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேகதாது அணை திட்டத்தை எதிர்க்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து, கர்நாடக முதல்-அமைச்சர் எடியூரப்பா, தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பதில் கடிதம் அனுப்பினார்.
அதில், நீர் மின் நிலையத்துடன் கூடிய மேகதாது அணையை, தமிழ்நாட்டில் உள்ள இரண்டு நீர் மின் நிலையங்களுடன் ஒப்பிடுவதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு, மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் நேற்று போலீஸ் மற்றும் சட்டத்துறை மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடகத்திற்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து தான் வருகிறது. அதுபோல் தான் தற்போது மார்கண்டேய நதி விவகாரத்திலும் தமிழக அரசு கர்நாடகத்திற்கு எதிராக செயல்படுகிறது. கர்நாடக மாநில எல்லைக்குள் தான் மேகதாதுவில் புதிய அணையை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேகதாதுவில் அணைகட்டுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீர் எப்போதும் போல் கொடுக்கப்படும். மேகதாதுவில் அணைகட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்கிறது. தமிழகத்தில் தற்போது புதிய அரசு அமைந்துள்ளது. இதனால் சிறய பிரச்சினையையும் கூட பெரிது ஆக்குகின்றனர்.
மேகதாதுவில் அணைகட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசு சட்டப்படி நடந்து கொள்கிறது. மேகதாதுவில் அணைகட்டும் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குக்கு எதிராக கர்நாடக அரசு சட்ட போராட்டம் நடத்தும்.
மேகதாது திட்டம் இரண்டு மாநிலங்களுக்கும் பயனளிக்கும். கர்நாடகாவின் நீர் தேவைக்காகவே மேகதாது திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். கிருஷ்ண ராஜ சாஹரத்திற்குப் பிறகு எங்களுக்கு நீர் சேமிப்பு பகுதிகள் எதுவும் இல்லை. மழை பெய்யாத காலங்களில் இங்கு சேமித்துவைத்துள்ள நீரை பயன்படுத்துவோம்.
எங்கள் எல்லையிலுள்ள பகுதியில் நாங்கள் மேகதாது அணைக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளோம் என கூறினார்.
Related Tags :
Next Story