அனில்தேஷ்முக் மீதான மாமூல் வழக்கு: சிறையில் சச்சின் வாசேவிடம் சி.பி.ஐ. விசாரணை


அனில்தேஷ்முக் மீதான மாமூல் வழக்கு: சிறையில் சச்சின் வாசேவிடம் சி.பி.ஐ. விசாரணை
x
தினத்தந்தி 11 July 2021 4:52 AM IST (Updated: 11 July 2021 4:52 AM IST)
t-max-icont-min-icon

அனில் தேஷ்முக் மீதான ரூ.100 கோடி மாமூல் வழக்கு தொடர்பாக சிறையில் முன்னாள் போலீஸ் அதிகாரி சச்சின் வாசேவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

ரூ.100 கோடி மாமூல்
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய வெடிகுண்டு கார் வழக்கு விசாரணையை தவறான பாதைக்கு கொண்டு சென்றதாக மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் கடந்த மார்ச் மாதம் ஊர்காவல் படைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அவர் உள்துறை மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக் மீது மாதம் ரூ.100 கோடி மாமூல் புகாரை தெரிவித்தார்.வெடிகுண்டு கார் வழக்கில் கைதாகி ஜெயிலில் உள்ள முன்னாள் போலீஸ் அதிகாரி சச்சின்வாசே மூலமாக அனில்தேஷ்முக் மும்பையில் உள்ள பார், ஓட்டல்களில் மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூலிக்க போலீசாரிடம் கூறியதாக பரம்பீர் சிங் குற்றம்சாட்டி இருந்தார். இந்த ஊழல் புகார் சி.பி.ஐ. விசாரணை நடத்த மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அனில்தேஷ்முக் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

சிறையில் விசாரணை
இந்தநிலையில் ஊழல் வழக்கு தொடர்பாக சச்சின் வாசேவிடம் விசாரணை நடத்த அனுமதி தருமாறு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தது. இதையடுத்து கோர்ட்டு சச்சின் வாசேவிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு அனுமதி வழங்கியது. இந்தநிலையில் அனில்தேஷ்முக் மீதான ஊழல் புகார் தொடர்பாக தலோஜா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சச்சின் வாசேவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த புதன், வியாழன் ஆகிய 2 நாட்கள் சச்சின்வாசேவிடம் விசாரணை நடத்தப்பட்டது என்றார். ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் சச்சின் வாசேவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி இருந்தது.

Next Story