புதுச்சேரியில் வரும் 16-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு - முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு


புதுச்சேரியில் வரும் 16-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு - முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 11 July 2021 7:28 AM GMT (Updated: 11 July 2021 8:42 AM GMT)

புதுச்சேரியில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு வரும் 16-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி,

உலகையே மிரட்டிய கொரோனா இந்தியாவிலும் புகுந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு (2020) மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அனைத்தும் மூடப்பட்டன.

இதற்கிடையில் புதுவையில் கொரோனா பரவல் 2-வது அலையில், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  அரசின் அதிரடி நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியது. 

இதையடுத்து மே மாதம் 24-ந் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது உயிரிழப்பு, பாதிப்பு எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. எனவே ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், புதுச்சேரியில் 9 முதல் 12-ம் வகுப்பு வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 16-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அதைபோல புதுச்சேரியில் உள்ள அனைத்து கல்லூரிகளும் வரும் 16-ம் தேதி முதல் திறக்கப்படும் எனவும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Next Story