தகுதியுள்ள அனைவருக்கும் போடுவதற்கு மாதம் 3 கோடி கொரோனா தடுப்பூசி தேவை மந்திரி ராஜேஷ் தோபே கூறுகிறார்

தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மாதம் 3 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து தேவை என சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.
மும்பை,
தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மாதம் 3 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து தேவை என சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.
தடுப்பூசி
நாட்டிலேயே அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மராட்டிய மாநிலத்தில் சமீபநாட்களாக நோயின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இருப்பினும் நோயின் தாக்கம் வெகுவாக குறையவில்லை. இந்தநிலையில் நோயின் தாக்கத்தை குறைக்க ஒரே வழியாக பார்க்கப்படுவது தடுப்பூசி மட்டும் தான். இதற்கான பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியதாவது:-
3 நாட்களுக்கு முன்பு மாநிலத்திற்கு 7 லட்சம் தடுப்பு மருந்து கிடைத்தது. இன்றுக்குள்(நேற்று) அது தீர்ந்துவிடும். அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, ஞாயிற்றுக்கிழமை வரை மாநிலத்தில் மொத்தம் 3 கோடியே 65 லட்சத்து 25 ஆயிரத்து 990 தடுப்பூசி டோஸ்கள் கிடைத்துள்ளன. இதில் மாநில அரசு நேரடியாக வாங்கியது 25 லட்சம் டோஸ் அடங்கும்.
3 கோடி தடுப்பூசி
மராட்டியத்தில் தினமும் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்காக திறன் உள்ளது. ஆனால் பற்றாக்குறையின் காரணமாக ஒரு நாளைக்கு 2 முதல் 3 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. நாங்கள் எங்கள் திறனுக்கு குறைவாகவே செயல்பட்டு வருகிறோம்.
தடுப்பூசி அளவுகள் முறையாக வழங்கப்பட்டால், தகுதியுள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான இலக்கை விரைவாக அடைய முடியும். இதற்கு குறைந்த பட்சம் மாதத்திற்கு 3 கோடி டோஸ் தடுப்பூசி தேவைப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story