நானா படோலேக்கு தேசியவாத காங்கிரஸ் பதிலடி


நானா படோலேக்கு தேசியவாத காங்கிரஸ் பதிலடி
x
தினத்தந்தி 13 July 2021 5:28 AM IST (Updated: 13 July 2021 5:28 AM IST)
t-max-icont-min-icon

மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே லோனாவாலாவில் கட்சி தொடர்களிடம் பேசியபோது, மராட்டிய அரசு தன்னை கண்காணித்து வருவதாகவும் தன்னுடைய கூட்டங்கள் குறித்து முதல்-மந்திரி மற்றும் உள்துறை மந்திரிக்கு தகவல் கொடுப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். உள்துறை மந்திரி தேசியவாத காங்கிரசை சேர்ந்த திலீப் வல்சே பாட்டீல் என்ற நிலையில், அந்த கட்சி நானா படோலேக்கு பதிலடி கொடுத்து உள்ளது.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவரும், சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரியுமான நவாப் மாலிக் கூறியதாவது:-

முக்கிய தலைவர்களின் நடமாட்டம், அவர்களின் கூட்டங்கள், அரசியல் திட்டங்கள் மற்றும் போராட்டங்கள் பற்றிய தகவலை சேகரிக்க காவல்துறையில் ஒரு சிறப்பு பிரிவு உள்ளது. இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஒரு விரிவான அறிக்கை உள்துறை மந்திரி மற்றும் முதல்-மந்திரியிடம் கொடுக்கப்படும். எந்த கட்சி அல்லது கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் இது நீண்டகால நடைமுறையாக இருந்து வருகிறது. இந்த செயல்முறை பற்றி நானா படோலேக்கு தெரியாவிட்டால், அவர் காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரிகள் அசோக் சவான், சுஷில்குமார் ஷிண்டே, பிரிதிவிராஜ் சாவன் ஆகியோரை அணுகி கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.தனக்கோ அல்லது தனது கட்சியின் தலைவர்களுக்கோ போலீஸ் பாதுகாப்பு வழங்குவதை படோலே விரும்பவில்லை என்றால் இதுகுறித்து அவர் விண்ணப்பம் செய்யலாம். இதுகுறித்து உள்துறை மந்திரி ஒரு முடிவு எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், வருவாய் மந்திரியுமான பாலசாகேப் தோரட் கூறுகையில், “அவர் (நானா படோலே) எதை குறிப்பிடுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. இதற்கு விளக்கம் அளிக்க அவரே பொருத்தமானவர்” என்றார்.

Next Story