காங். மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மாற்றப்பட மாட்டார் என தகவல்

ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மாற்றம் செய்யப்படலாம் என பரவலாக கூறப்பட்டது.
புதுடெல்லி,
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19 ஆம் தேதி துவங்க உள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடர் துவங்க இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில், காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் பொறுப்பில் இருந்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மாற்றப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின. ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மாற்றம் செய்யப்படலாம் என பரவலாக கூறப்பட்டது. ரஞ்சன் சவுத்ரி மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தற்போதைக்கு காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட மாட்டார் என்று காங்கிரஸ் வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் ஆனால் எப்போது இந்த முடிவு அமல்படுத்தப்படும் என்று தெளிவான தகவல் எதுவும் இல்லை.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்குப் பிறகு கட்சியில் அமைப்பு ரீதியான மாற்றம் செய்யப்பட உள்ளது. அப்போது ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படலாம் எனவும் அக்கட்சியின் மூத்த நிர்வாகி கூறியதாக பிரபல ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story