புதிதாக ஏ.டி.எம்., கிரெடிட் கார்டு வழங்க மாஸ்டர்கார்டு நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி தடை


புதிதாக ஏ.டி.எம்., கிரெடிட் கார்டு வழங்க மாஸ்டர்கார்டு நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி தடை
x
தினத்தந்தி 15 July 2021 2:54 AM GMT (Updated: 15 July 2021 2:54 AM GMT)

புதிதாக யாருக்கும் ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு, பிரீபெய்டு கார்டு ஆகியவற்றை வழங்க மாஸ்டர்கார்டு நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது.

மும்பை, 

மாஸ்டர்கார்டு, விசா உள்ளிட்ட நிறுவனங்கள், பல்வேறு வங்கிகளுக்கான ஏ.டி.எம்., கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகின்றன. இத்தகைய நிறுவனங்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந் தேதி ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. அதில், 6 மாதங்களுக்குள், அந்த நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் சேகரித்த தகவல்கள், பண பரிமாற்ற விவரங்களை இந்தியாவில் மட்டுமே சேகரித்து வைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த உத்தரவுக்கு மாஸ்டர்கார்டு நிறுவனம் உடன்படவில்லை. இதையடுத்து, புதிதாக யாருக்கும் ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு, பிரீபெய்டு கார்டு ஆகியவற்றை வழங்க மாஸ்டர்கார்டு நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி நேற்று தடை விதித்தது.

இந்த தடை, வருகிற 22-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இத்தகைய தடை விதிக்கப்படும் 3-வது நிறுவனம் மாஸ்டர்கார்டு ஆகும். இருப்பினும், அதன் பழைய வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story