உத்தரகாண்ட்: போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் பிடிபட்ட சுற்றுலா பயணிகள்


உத்தரகாண்ட்: போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் பிடிபட்ட சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 15 July 2021 11:15 AM GMT (Updated: 15 July 2021 11:15 AM GMT)

போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதலுடன் உத்தரகாண்ட்டில் சுற்றித்திரிந்த சுற்றுலா பயணிகளை போலீசார் பிடித்தனர்.

டேராடூன்,

கொரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து உத்தரகாண்ட் நுழைய இ-பாஸ் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதல் கட்டாயம் என்ற நடைமுறை அமலில் உள்ளது.

தற்போது கோடை வெப்பம் அதிகரித்து வருவதாலும், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாலும் சுற்றுலா தளங்கள் அதிகம் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதற்கிடையில், சுற்றுலா பயணிகள் போலி ஆவணங்கள் மற்றும் போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதல்களை பயன்படுத்தி உத்தரகாண்ட் மாநிலத்திற்குள் நுழைவதாகவும், சுற்றுலா தளங்களுக்கு செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இதையடுத்து, மாநில எல்லைகள் மற்றும் சுற்றுலாத்தளங்களில் சோதனையை போலீசார் தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில், உத்தரகாண்டின் டேராடூன் - முசோரி சுற்றுலாத்தளத்திற்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் போலீசார் இன்று சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 13 சுற்றுலா பயணிகள் போலி கொரோனா சான்றிதல் மற்றும் போலி ஆவணங்களை வைத்திருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.

இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், சுற்றுலா பயணிகளுக்கு போலி கொரோனா சான்றிதல் மற்றும் ஆவணங்களை தயாரித்துக்கொடுத்த 4 பேரை கைது செய்தனர். உத்தரகாண்டில் இதுவரை 100 சுற்றுலா பயணிகள் போலி கொரோனா நெகட்டிவ் பிடிபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story