மத்திய பிரதேச மாநிலத்தில் கிணற்றில் விழுந்த சிறுமியின் மீட்பு பணியில் பரிதாபம் - வேடிக்கை பார்க்க வந்த 5 பேர் சுற்றுச்சுவர் இடிந்து சாவு


மத்திய பிரதேச மாநிலத்தில் கிணற்றில் விழுந்த சிறுமியின் மீட்பு பணியில் பரிதாபம் - வேடிக்கை பார்க்க வந்த 5 பேர் சுற்றுச்சுவர் இடிந்து சாவு
x
தினத்தந்தி 17 July 2021 4:45 AM IST (Updated: 17 July 2021 4:45 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேச மாநிலத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை மீட்க முயன்றதை வேடிக்கை பார்க்கச்சென்றவர்களில் 5 பேர், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பலியானார்கள்.

விதிஷா,

மத்திய பிரதேச மாநிலம், விதிஷா மாவட்டத்தில் கஞ்ச் பசோதா தாலுகா பகுதியில் 50 அடி ஆழம் கொண்ட ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றில் 20 அடி உயரத்துக்கு தண்ணீர் இருந்துள்ளது.

இந்த கிணற்றில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு ஒரு சிறுமி தவறி விழுந்து விட்டாள். இது குறித்து தகவல் அறிந்தவுடன் மீட்பு பணி முடுக்கி விடப்பட்டது. அதை வேடிக்கை பார்க்க பெரும் கூட்டம் கூடி விட்டது.

இந்த நிலையில் கிணற்றின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து விட்டதால் அதையொட்டி நின்றுகொண்டிருந்த சுமார் 25 பேர் கிணற்றில் விழுந்து விட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இரவு 11 மணி அளவில் 4 போலீசாருடன் ஒரு டிராக்டர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. ஆனால் அந்த டிராக்டர் எதிர்பாராத வகையில் போலீசாருடன் சறுக்கி கிணற்றில் விழுந்து விட்டது.

இதற்கிடையே மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர். கிணற்றில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு, மீட்பு பணி முழுவீச்சில் நடந்தது. கிணற்றில் டிராக்டருடன் விழுந்த போலீசார் மீட்கப்பட்டனர்.

போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் தொடர்ந்தன. இரவோடு இரவாக 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. நேற்று மாலை வரை மேலும் 3 பேரது உடல்கள் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இந்த துயர சம்பவத்தில் 5 பேர் இறந்திருப்பது அந்தப் பகுதியை உலுக்கி உள்ளது.

நேற்று மாலை வரை 19 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்பதற்கு தொடர்ந்து முயற்சிகள் நடைபெறுவதாக அந்தப் பகுதி போலீஸ் அதிகாரி பரத் பூஷண் சர்மா தெரிவித்தார்.

முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் உத்தரவின்பேரில், விதிஷா பாதுகாவல் மந்திரி விஷ்வாஸ் சாரங் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டார்.

மேலும், இந்த பரிதாப சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

Next Story