விதிஷாவில் நடந்த துயர சம்பவம் வேதனை அளிக்கிறது: பிரதமர் மோடி

விதிஷாவில் நடந்த துயர சம்பவம் வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய பிரதேச மாநிலம், விதிஷா மாவட்டத்தில் கஞ்ச் பசோதா தாலுகா பகுதியில் 50 அடி ஆழம் கொண்ட ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றில் 20 அடி உயரத்துக்கு தண்ணீர் இருந்துள்ளது.இந்த கிணற்றில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு ஒரு சிறுமி தவறி விழுந்து விட்டாள்.
இது குறித்து தகவல் அறிந்தவுடன் மீட்பு பணி முடுக்கி விடப்பட்டது. அதை வேடிக்கை பார்க்க பெரும் கூட்டம் கூடி விட்டது.இந்த நிலையில் கிணற்றின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து விட்டதால் அதையொட்டி நின்றுகொண்டிருந்த சுமார் 25 பேர் கிணற்றில் விழுந்து விட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இரவு 11 மணி அளவில் 4 போலீசாருடன் ஒரு டிராக்டர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. ஆனால் அந்த டிராக்டர் எதிர்பாராத வகையில் போலீசாருடன் சறுக்கி கிணற்றில் விழுந்து விட்டது.
இதற்கிடையே மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர். கிணற்றில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு, மீட்பு பணி முழுவீச்சில் நடந்தது. கிணற்றில் டிராக்டருடன் விழுந்த போலீசார் மீட்கப்பட்டனர்.போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் தொடர்ந்தன. இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், விதிஷாவில் நடந்த துயர சம்பவம் வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story