பஞ்சாப் காங்கிரஸ் நெருக்கடி: அமரீந்தர் சிங்கை சமரசம் செய்ய மேலிட தலைவர் பேச்சு


Image courtesy : Twitter@RT_MediaAdvPBCM
x
Image courtesy : Twitter@RT_MediaAdvPBCM
தினத்தந்தி 17 July 2021 12:43 PM GMT (Updated: 2021-07-17T18:13:46+05:30)

பஞ்சாப் காங்கிரஸ் நெருக்கடி: கட்சி பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் அமரீந்தர் சிங்கை சந்தித்து பேசினார்

சண்டிகார்

பஞ்சாபில் முதல்-மந்திரி  அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.  பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டசபை  தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல் மந்திரி  அமரீந்தர் சிங், முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும்  இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதனால், சித்து ஆம் ஆத்மி கட்சிக்கு மாறவுள்ளதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. சித்துவுக்கு  ஐந்து மந்திரிகள்  மற்றும் 10-15 எம்.எல்.ஏ.க்கள்  ஆதரவு உள்ளது. மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்படாவிட்டால் இவரகள்  ஏகமனதாக வெளியேறலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இஅதை தொடர்ந்து சமரசப் பேச்சு வார்த்தையை மேற்கொள்ள தேசிய தலைவர்கள் களமிறங்கினர்.

இரு தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்து காங்கிரஸ் தலைமை ஆலோசனை நடத்தியது. இதையடுத்து, சட்டசபை தேர்தலில் அமரீந்தர் சிங்கையே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தவும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை நியமிக்கவும் காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், நேற்று டெல்லி சென்றுள்ள சித்து சோனியா காந்தியை  அவரது இல்லத்தில் சந்தித்தார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பஞ்சாப் விவகாரங்களுக்கான கட்சி பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் ஆகியோரும் சித்துடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.

சித்துவை காங்கிரஸ் தலைமை அடிக்கடி சந்தித்து பேசுவதால், முதல் மந்திரி அமரீந்தர் சிங் அதிருப்தி அடைந்துள்ளார். இதனையடுத்து சோனியா காந்திக்கு கடிதம் ஒன்று எழுதினார்.

அதில், "பஞ்சாப் மாநில விவகாரங்களில் காங்கிரஸ் தலைமை தலையிட வேண்டாம்" என கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும் காங்கிரஸ் தலைமை பஞ்சாப் அரசியலில் பிளவு ஏற்படுத்த நினைப்பதாகவும் அதனை தடுக்க வேண்டும் எனவும் அமரீந்தர் சிங் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பஞ்சாப் விவகாரங்களுக்கான கட்சி பொறுப்பாளர் ஹரிஷ் ராவத்   பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் இன்று சிங்கை சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் தலைவர் எடுக்கும் எந்த முடிவையும்  அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இதுகுறித்து  முதல் மந்திரி அமரீந்தர் சிங் ஊடக ஆலோசகர் வெளியிட்டு உள்ள டுவிட்டில் 

ஹரிஷ் ராவத்துடன்  ஒரு பயனுள்ள சந்திப்பு நடந்தது. காங்கிரஸ் தலைவரின்  எந்தவொரு முடிவும் அனைவரால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது என கூறி உள்ளார்.

Next Story