கொரோனா 2-வது அலையிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட போலீசார் மத்தியில் மரண விகிதம் குறைவு

2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட போலீசாரிடையே கொரோனா 2-வது அலையின்போதும் மரண விகிதம் குறைந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
கொரோனாவை தடுக்கும் ஒரே ஆயுதமாக தடுப்பூசிகள் விளங்குகின்றன. எனவே தடுப்பூசி போடுவதை மத்திய-மாநில அரசுகளும், சுகாதாரத்துறையும் தீவிரமாக எடுத்துக்கொண்டு இருக்கின்றன.
இந்த தடுப்பூசியின் பயன்பாடு அவ்வப்போது நிரூபணமாகியும் வருகிறது. அந்த வகையில் போலீசார் மத்தியில் நடத்தப்பட்டிருக்கும் ஆய்வின் முடிவுகள் தற்போது மேலும் அதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளன.
முன்கள பணியாளர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள போலீசாருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்பட்டது. அவர்களில் தடுப்பூசி எவ்வாறு செயலாற்றுகிறது என்பதை கண்டறிய இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) மூலம் தமிழ்நாட்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மொத்தம் 1,17,524 போலீசார் இந்த ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 17,059 பேர் தடுப்பூசி போடாதவர்கள் ஆவர். 32,792 பேர் ஒரு டோசும், 67,673 பேர் இரு டோஸ்களும் போட்டவர்கள்.
டெல்டா மாறுபாடு வைரசால் ஏற்பட்ட இந்த 2-வது அலையின்போது இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போலீசாரில் இறப்புகளும் நிகழ்ந்துள்ளன.
அந்தவகையில் தடுப்பூசி போடாதவர்களில் 20 போலீஸ்காரர்கள் இறந்துள்ளனர். ஆனால் ஒரு டோஸ் போட்டவர்கள் 7 பேரும், 2 டோஸ் போட்டவர்களில் 4 பேரும் மட்டுமே பலியாகி இருக்கிறார்கள்.
இதன் மூலம் ஒரு டோஸ் போட்டவர்களுக்கு 82 சதவீத பாதுகாப்பும், 2 டோஸ் போட்டவர்களுக்கு 95 சதவீத பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்து உள்ளன.
தடுப்பூசி போடாதவர்களில் இறப்பு விகிதம் 1000 போலீசாருக்கு 1.17 என்ற அளவிலும், ஒரு டோஸ் மற்றும் 2 டோஸ் போட்டவர்களுக்கு முறையே 0.21 மற்றும் 0.06 என்ற வகையிலும் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளை நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் நேற்று வெளியிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், ‘நமது தடுப்பூசிகள் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு மிகுந்தவை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும். புற்றுநோயாளிகள், நீரிழிவு நோயாளிகளுக்கு இது அதிகம் தேவை. அதற்கான உண்மையான செயல் விளக்கம்தான் இந்த ஆய்வு முடிவுகள் ஆகும்’ என்று தெரிவித்தார்.
அதேநேரம் தடுப்பூசிகள் மட்டுமின்றி முக கவசம் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மிகவும் தேவை எனவும் அவர் கூறினார்.
Related Tags :
Next Story