வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் - நிர்மலா சீதாராமனுக்கு டி.ராஜா கடிதம்


வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் - நிர்மலா சீதாராமனுக்கு டி.ராஜா கடிதம்
x
தினத்தந்தி 18 July 2021 3:58 AM IST (Updated: 18 July 2021 3:58 AM IST)
t-max-icont-min-icon

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு எடுத்து உள்ளது. இதற்கு வங்கி ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

இதைப்போல அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

இந்த நிலையில் வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிடுமாறு இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உரையில், 2 தேசிய வங்கிகளை தனியார் மயமாக்கும் பரிந்துரைகளை மத்திய அரசு வெளியிட்டு இருந்தது. வங்கிகளை தனியார் மயமாக்குவது நமது பொருளாதாரம் மற்றும் மக்களின் நலன்களுக்கு எதிரானது.

எனவே இது தொடர்பாக எங்களின் கடுமையான எதிர்ப்பை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நாங்கள் தெரிவித்து இருக்கிறோம். இந்த எதிர்ப்புகள் அனைத்தும் உண்மையை சார்ந்தவை.

ஏனெனில் இன்று நமது வங்கிகள் சாதாரண மக்களின் அதிக அளவிலான சேமிப்பை கொண்டிருக்கிறது. ஆனால் வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே இந்த விலைமதிப்பற்ற சேமிப்புகள் பாதுகாப்பாக இருக்கும்.

பல தனியார் வங்கிகளின் அளவற்ற தோல்விகள் காரணமாகவே அன்றைய நாட்களில் வங்கிகளை தேசியமயமாக்கும் தேவை ஏற்பட்டது. மேலும் தற்போது பல கார்பரேட் நிறுவனங்கள் வங்கிகளில் கடன் மோசடியில் ஈடுபட்டு உள்ளன.

மேலும் சில தனியார் வங்கிகளின் சமீபத்திய அனுபவங்களால் சிறந்த செயல்பாட்டுக்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. இந்த சூழலில் வங்கிகளை தனியாரின் கைகளில் ஒப்படைப்பது விவேகமற்றதாக இருக்கும்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான அரசின் முயற்சிகளுக்கு பெரிதும் உதவுகின்றன. இந்த வங்கிகளை மேலும் பலப்படுத்த வேண்டும்.

சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளை தனியார் மயமாக்க நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளதாக சமீத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.

வங்கிகள் தனியார் மயமாக்கும் தகவல் கேட்டு சில வாடிக்கையாளர்கள் தங்களின் வைப்புத்தொகைகளை திரும்ப எடுத்து வருகின்றனர். எனவே இது பற்றிய அரசின் நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்க வேண்டும்.

எந்தவொரு வங்கியையும் தனியார் மயமாக்குவதற்கு அரசிடம் திட்டம் இருந்தால், அதை எங்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. அத்தகைய முடிவை மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் டி.ராஜா கூறியுள்ளார்.

Next Story