பக்ரீத் பண்டிகையையொட்டி பசுக்களை கொன்றால் கடும் நடவடிக்கை: கர்நாடக மந்திரி பிரபுசவான்


பக்ரீத் பண்டிகையையொட்டி பசுக்களை கொன்றால் கடும் நடவடிக்கை: கர்நாடக மந்திரி பிரபுசவான்
x
தினத்தந்தி 19 July 2021 5:01 PM GMT (Updated: 2021-07-19T22:31:01+05:30)

பக்ரீத் பண்டிகையையொட்டி பசுக்களை கொன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி பிரபுசவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடக கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொல்லப்படக்கூடாது
கர்நாடகத்தில் பசுவதை தடை செய்யப்பட்டுள்ளது. பசுக்களை கொல்ல அனுமதி இல்லை. அதனால் கர்நாடகத்திற்குள் பசுக்களையோ அல்லது பசு இறைச்சியையோ கடத்தி சென்றால் அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை மாநிலத்தில் எங்காவது பசுக்கள் வதைக்கப்படுவது தெரியவந்தால், அந்த மாவட்டங்களின் பொறுப்பு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவாக பக்ரீத் பண்டிகையின்போது பசுக்களை கொல்வது வழக்கம். அதனால் எக்காரணம் கொண்டும் பசுக்கள் கொல்லப்படக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாரும் நம்பக்கூடாது
மாநிலத்தின் எல்லை பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாநிலத்தில் பசுக்கள் கடத்தப்படுவது குறித்து பொதுமக்கள் கால்நடைத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். ஆனால் யாரும் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது. விலங்குகள் நல வாரிய உறுப்பினர்களுக்கு மண்டலம் வாரியாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகளுடன் இணைந்து அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். சமுதாயத்தில் அமைதியை சீர்குலைக்க சிலர் தேவையின்றி சமூக வலைத்தளத்தில் தகவல்களை பரப்பக்கூடும். அதை யாரும் நம்பக்கூடாது.

இவ்வாறு மந்திரி பிரபுசவான் கூறினார்.

Next Story