நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது: எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் முதல் நாளிலேயே இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக முதல் நாளிலேயே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கொரோனா மற்றும் பரபரப்பான அரசியல் சூழலில் நடைபெறப்போகும் இந்த தொடர் மீது நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ஆனால் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக முதல் நாளிலேயே இரு அவைகளிலும் புயல் வீசியது.
மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 4 எம்.பி.க்களை பதவி ஏற்க சபாநாயகர் அழைத்தார். அதன்படி விஜய் வசந்த் (காங்கிரஸ்), மட்டிலா குருமூர்த்தி (ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்), மங்கல் சுரேஷ் அங்கடி (பா.ஜனதா), அப்துஸ்சமத் சமாதானி (முஸ்லிம் லீக்) ஆகியோர் எம்.பி.க்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் மத்திய மந்திரி சபையில் புதிதாக சேர்க்கப்பட்ட புதிய மந்திரிகளை அறிமுகப்படுத்துமாறு பிரதமர் மோடியை சபாநாயகர் ஓம் பிர்லா அழைத்தார். அப்போது காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுந்து, பொருளாதாரம் மற்றும் விலைவாசி உயர்வு குறித்து தங்கள் கட்சி அளித்துள்ள நோட்டீசை விவாதத்துக்கு எடுக்க வலியுறுத்தினார்.
அப்போது, வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தும் கோஷங்கள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை ஏந்திக்கொண்டு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.
அப்போது நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் படேல் எழுந்து, பிரதமர் மோடியை புதிய மந்திரிகளை அறிமுகம் செய்ய அனுமதிக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு செவிகொடுக்காத எம்.பி.க்கள், தங்கள் அமளியை தொடர்ந்தனர்.
இதைப்போல எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லாவும் வேண்டுகோள் விடுத்தார். சபையின் கண்ணியத்தை குலைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்ட சபாநாயகர், சிறந்த பாரம்பரியத்தை மீறுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இவ்வாறு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி தொடரவே, புதிய மந்திரிகளை அறிமுகம் செய்ததாக கருதுமாறு சபாநாயகரை கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, அவர்களது பெயர்கள் அடங்கிய பட்டியலையும் சபாநாயகரிடம் ஒப்படைத்தார்.
புதிய மந்திரிகளை அறிமுகம் செய்ய விடாமல் பிரதமரை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தடுத்த விவகாரம் ஆரோக்கியமானதல்ல என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கும் குறைகூறினார். கடந்த 24 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில் இது முதல் முறை எனவும் அவர் சாடினார்.
பின்னர் சமீபத்திய மாதங்களில் மரணமடைந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவுக்கும் நிகழ்வை ஓம் பிர்லா தொடங்கினார். இரங்கல் தெரிவிப்பதற்காகவேனும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளுக்கு திரும்ப வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
அதன்படி அவையின் நடுப்பகுதியில் நின்றிருந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் இருக்கைக்கு திரும்பினர்.
பின்னர் சமீபத்தில் இறந்த 40 முன்னாள் எம்.பி.க்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.-
இந்த நிகழ்வுக்காக அவையில் ஏற்பட்ட மவுனத்தை பயன்படுத்திக்கொண்ட சிரோமணி அகாலிதள எம்.பி.யும், முன்னாள் மந்திரியுமான ஹர்சிம்ரத் கவுர் பாதலும், சில காங்கிரஸ் எம்.பி.க்களும், விவசாய போராட்டத்தில் மரணமடைந்த விவசாயிகளுக்கும் அவையில் இரங்கல் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதன் மூலம் மீண்டும் அவையில் அமளி தொடர்ந்தது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் நடுப்பகுதிக்கு சென்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதனால் அவையில் குழப்பம் நிலவியதால், மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
2 மணிக்கு அவை மீண்டும் கூடியபோதும் நிலைமை மேம்படவில்லை. வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி தொடர்ந்தது. எனவே 3.30 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.
3-வது முறையாக அவை கூடியபோதும் எதிர்க்கட்சியினரின் நிலையில் மாற்றம் இல்லை. ஆனால் இந்த அமளிக்கு மத்தியிலும், பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிக்கை ஒன்றை அளித்தார்.
அப்போது அவர் இந்த பிரச்சினையில் பதற்றம் அடைய தேவையில்லை என கூறினார்.
இதன் பின்னரும் சபையில் அமளி தொடர்ந்ததால் மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
இதற்கிடையே மாநிலங்களவையும் பலமுறை இடையறுகளை சந்தித்தது. காலையில் அவை கூடியதும் இறந்து போன அவை உறுப்பினர்களான ரகுநாத் மொகாபத்ரா, ராஜீவ் சதாவ் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு மணி நேரம் சபை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் 12.25-க்கு மாநிலங்களவை கூடியது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த பரபரப்புக்கு மத்தியிலும், புதிய மந்திரிகளை அறிமுகம் செய்யுமாறு பிரதமர் மோடியை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார். ஆனால் உறுப்பினர்களின் அமளி அதிகரித்ததால் பிரதமரால் புதிய மந்திரிகளை அறிமுகம் செய்ய முடியவில்லை.
அவையின் மையப்பகுதியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முகாமிட்டு அமளியை தொடர்ந்ததால் மாநிலங்களவை 2 மணி வரையும், பின்னர் 3 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 3 மணிக்கும் அவையில் அமைதி திரும்பாததால் நாள் முழுவதற்கும் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வழங்கியிருந்த 17 ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களை ஒரே நேரத்தில் அனுமதிக்க முடியாது என வெங்கையா நாயுடு அறிவித்தார். எனினும் அனைத்து முக்கியமான பிரச்சினைகளும் அவையில் விவாதிக்கப்படும் என உறுதியளித்தார்.
இதை ஏற்காததால் எதிர்க்கட்சிகள் தங்கள் அமளியை தொடர்ந்தனர். இதனால் அவையின் அலுவல்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் முடங்கியது நாடாளுமன்ற வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story