பெகாசஸ் உளவு விவகாரம்: மாநிலங்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் விவாதிக்க சஞ்சய் சிங் நோட்டீஸ்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 July 2021 2:23 AM GMT (Updated: 20 July 2021 2:23 AM GMT)

பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் தொடர்பாக, மாநிலங்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் விவாதிக்க ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் நோட்டீஸ் அளித்துள்ளார்.

புதுடெல்லி, 

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக செய்தி வெளியானது.

'தி வயர்' இணையதளம் வெளியிட்ட செய்தியின்படி, “ இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், நீதிபதி ஒருவர், மத்திய அமைச்சரவையில் இரு அமைச்சர்கள், பாதுகாப்பு அமைப்பில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியலமைப்புச் சட்டப் பதவியில் இருப்போர் எனப் பலருடைய செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோலவே பல்வேறு பத்திரிகையாளர்களின் செல்போன்களும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பர்மிடன் ஸ்டோரிஸ், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டு கேட்பைக் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் நேற்றைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பெரும் புயலைக் கிளப்பியது. 

இதுதொடர்பாக மக்களவையில் பதிலளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், “சட்டவிரோதமாக கண்காணிப்பது என்பது இந்தியாவில் சாத்தியமல்ல. இதனை ஆய்வு செய்து, சட்டவிரோத கண்காணிப்பு நடக்காமல் தடுக்கும் அளவுக்கு நமக்கு போதுமான செயல் திட்டம் உள்ளது. நமத நுாட்டில் நீண்டகாலமாக இதுபோன்ற அமைப்புகளை நாம் வலிமைப்படுத்தி வந்துள்ளோம். நமது சட்டங்களும் வலுவானவை.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முதல்நாள் இரவு ஒரு இணையதளத்தில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. பெரும் குற்றச்சாட்டுக்களை கூறி வெளியிடப்பட்டுள்ள இந்த செய்தி நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்பு வெளியானது தற்செயலானது அல்ல. குறிப்பிட்ட நபர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கூறப்படுவது எந்த ஆதாரமும் இல்லாதது. இதில் துளியும் உண்மையும் இல்லை. பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தி இதனை செய்வதாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை” என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் 

ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் தொடர்பான ஊடக அறிக்கை குறித்து மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் (ஜீரோ ஹவர்) விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பூஜ்ஜிய நேரம் (ஜீரோ ஹவர்) என்பது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பின்பற்றப்படும் நிகழ்வாகும். உறுப்பினர்கள் தாங்கள் கேட்க இருக்கும் கேள்விகளை அதற்கு முன்கூட்டியே சபாநாயகரிடம் தெரிவிக்க வேண்டும். இதில் சபாநாயகரின் முடிவே இறுதியானது அவர் உறுப்பினர்களை கேள்வி எழுப்ப அனுமதிக்கலாம் அல்லது மறுக்கலாம்.

Next Story