ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மியான்மர் நாட்டினருக்கு வேலையா? மத்திய அரசு விளக்கம்


ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மியான்மர் நாட்டினருக்கு வேலையா? மத்திய அரசு விளக்கம்
x
தினத்தந்தி 20 July 2021 8:20 PM GMT (Updated: 2021-07-21T01:50:33+05:30)

மியான்மர் நாட்டவர்களுக்கு அப்படி வேலைவாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

அண்டை நாடான மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அங்கு அமைதியற்ற சூழல் நிலவிவருகிறது. இந்நிலையில் மியான்மர் நாட்டவர்கள் பலர் மிசோரம் மாநில எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்த சூழலில் மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி நித்யானந்த ராய், இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் நேற்று எழுத்துபூர்வமாக பதிலளித்தார்.

அதில், ‘மியான்மர் உள்நாட்டு சூழல் காரணமாக அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்திய-மியான்மர் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைவதாக தகவல்கள் வந்திருக்கின்றன. அவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவுவதைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும், கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படியும் எல்லை பாதுகாப்பு படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.

இந்தியாவுக்குள் நுழைந்த மியான்மர் நாட்டுக்காரர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்பு அளிக்க மிசோரம் மாநில அரசு முடிவு செய்துள்ளதா என்று நித்யானந்த ராயிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘மிசோரம் அரசிடம் இருந்து கிடைத்த தகவல்படி, மியான்மர் நாட்டவர்களுக்கு அப்படி வேலைவாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை’ என்றார்.


Next Story