டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் இல்லை, குண்டர்கள் - மத்திய மந்திரி மீனாட்சி லேகி


டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் இல்லை, குண்டர்கள் - மத்திய மந்திரி மீனாட்சி லேகி
x
தினத்தந்தி 22 July 2021 3:33 PM GMT (Updated: 22 July 2021 3:33 PM GMT)

டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, அவர்கள் குண்டர்கள் என்று மத்திய மந்திரி மீனாட்சி லேகி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகிறது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதையொட்டி மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு வெளியே தினந்தோறும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். ஆனால் விவசாயிகளின் இந்த திட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி அளிக்கவில்லை. கொரோனாவை காரணம் காட்டி விவசாயிகளுக்கு இந்த போராட்டத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தங்கள் போராட்டக்களத்தை டெல்லி ஜந்தர் மந்தருக்கு மாற்ற விவசாயிகள் முடிவு செய்தனர். அதாவது வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இன்று முதல் தினந்தோறும் ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என சம்யுக்தா கிசான் மோர்ச்சா அறிவித்தது.

இந்த போராட்டத்துக்காக டெல்லி சிங்கு எல்லையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களில் விவசாயிகள் ஜந்தர் மந்தருக்கு சென்றனர்.

அங்கு ‘விவசாயி நாடாளுமன்றம்’ நிகழ்ச்சியை அவர்கள் நடத்துகிறார்கள். இதற்காக தினந்தோறும் 200 போராட்டக்காரர்கள் சிங்கு எல்லையில் இருந்து ஜந்தர் மந்தர் செல்ல உள்ளதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தையொட்டி ஜந்தர் மந்தரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக பேசிய மத்திய கலாச்சாரத்துறை மந்திரி  மீனாட்சி லேகி, “அவர்கள் விவசாயிகள் அல்ல, அவர்கள் குண்டர்கள், அவர்கள் செய்வது எல்லாம் குற்றச் செயல்கள். ஜனவரி 26 அன்று நடந்தது வெட்கக்கேடான குற்றவாளிகளின் நடவடிக்கைகள். எதிர்க்கட்சி இதுபோன்ற விவசாயிகளின் நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது”  'உழவர் நாடாளுமன்றத்தில்' ஒரு ஊடக நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது வேதனை என்றார். 

Next Story