சச்சின் வாசே நியமனம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தலாம்: மும்பை ஐகோர்ட்டு


சச்சின் வாசே நியமனம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தலாம்: மும்பை ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 22 July 2021 7:52 PM GMT (Updated: 22 July 2021 7:52 PM GMT)

போலீஸ் பணியிடமாற்றம் ஊழல் குற்றச்சாட்டு, சச்சின் வாசே மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மும்பை ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

சி.பி.ஐ. வழக்கு
மும்பை கார் வெடிகுண்டு வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த சச்சின்வாசே கைது செய்யப்பட்டதை அடுத்து, கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் ஊர்காவல் படைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அவர் உள்துறை மந்திரியாக இருந்த அனில்தேஷ்முக் மீது ரூ.100 கோடி ஊழல் புகாரை தெரிவித்தார். அனில்தேஷ்முக் மும்பையில் உள்ள ஓட்டல், பார்களில் இருந்து போலீசாரை மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலித்து தருமாறு கூறியதாக அவர் புகாரில் கூறியிருந்தார்.மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்த இந்த புகார் குறித்து சி.பி.ஐ. அனில்தேஷ்முக் மீது வழக்குப்பதிவு செய்தது.

மாநில அரசு மனு
இந்தநிலையில் கடந்த ஏப்ரல் 30-ந் தேதி மும்பை ஐகோர்ட்டில் மாநில அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில், ‘‘சி.பி.ஐ. பரம்பீர் சிங் புகாரில் உள்ள ரூ.100 கோடி ஊழல் குற்றச்சாட்டு குறித்து மட்டுமே விசாரிக்க வேண்டும். போலீஸ் பணியிடமாற்றம், நியமன ஊழல் குற்றச்சாட்டு, சச்சின் வாசேவை மீண்டும் பணியில் சேர்த்தது குறித்து விசாரணை நடத்த கூடாது" என கூறியிருந்தது. இதுகுறித்து எப்.ஐ.ஆர்.யில் இடம் பெற்ற 2 பத்திகளை நீக்க வேண்டும் என மாநில அரசு கூறியிருந்தது.இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே, என்.ஜே. ஜாம்தார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது. இதில் நீதிபதிகள், "போலீஸ் அதிகாரி பணி நியமனம், இடமாற்றம் மற்றும் 15 ஆண்டுகளுக்கு பிறகு சச்சின்வாசே மீண்டும் பணியில் சேர்க்கப்பட்ட விவகாரத்தில் அனில்தேஷ் முக் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பதால் இது குறித்து சி.பி.ஐ. விசாரணை 
நடத்தலாம்’’ என்றார். இதையடுத்து போலீஸ் பணிநியமனம், இடமாற்றத்தில் நடந்த ஊழல், சச்சின்வாசே மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு அனுமதி வழங்கிய நீதிபதிகள் மாநில அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

அனில்தேஷ் மனு தள்ளுபடி
இதையடுத்து ஐகோர்ட்டின் உத்தரவுக்கு 2 வாரங்கள் தடைவிதிக்க மாநில அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவையும் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.இதேபோல தனக்கு எதிராக சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய கோரி அனில்தேஷ் முக் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், சி.பி.ஜ. மாநில அரசிடம் உரிய முன் அனுமதி பெறாமல் அவா் மீது 
வழக்குப்பதிவு செய்தது சட்டவிரோதமானது என கூறியிருந்தார்.

இதில் மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.பி.ஐ. வழக்கை ரத்து செய்ய கோரிய அனில்தேஷ்முக்கின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

Next Story