மராட்டியத்தில் மலையடிவாரங்களில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம்: உத்தவ் தாக்கரே


மராட்டியத்தில் மலையடிவாரங்களில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம்: உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 24 July 2021 6:50 PM GMT (Updated: 24 July 2021 6:50 PM GMT)

மராட்டியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆய்வு செய்தார்.

வெள்ளத்தால் பாதிப்பு
மராட்டியத்தில் மேற்கு மராட்டியம், கொங்கன் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக ராய்காட், ரத்னகிரி, சத்தாரா, கோலாப்பூர் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதேபோல பலத்த மழையால் ரத்னகிரி, ராய்காட் மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்தன.இதில் நேற்று முன்தினம் ராய்காட் மாவட்டம், மகாட் தாலுகா தலாய் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் உயிரிழந்தனர். அவர்களில் 41 பேர் நேற்று வரை மீட்கப்பட்டனர்.மேலும் மராட்டியத்தில் 48 மணி நேரத்தில் மழைக்கு சுமார் 129 பேர் உயிரிழந்ததாக நேற்று முன்தினம் மாநில பேரிடர் 
மேலாண்மை பிரிவு மூத்த அதிகாரி கூறினார்.

முதல்-மந்திரி ஆய்வு
இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று நிலச்சரிவில் 41 பேர் பலியான தலாய் கிராமத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். மேலும் அவர் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இதில் முதல்-மந்திரி பாதிக்கப்பட்டவர்களிடம், " நீங்கள் மிகப்பெரும் துயரத்தை சந்தித்து உள்ளீர்கள். தற்போது நீங்கள் உங்களை கவனித்து கொள்ள வேண்டும். மற்ற விஷயங்களை அரசிடம் விட்டுவிடுங்கள். உங்களின் மறுவாழ்வுக்கும், இழப்புக்கு நிவாரணம் வழங்கவும் நாங்கள் உறுதி அளிக்கிறோம். உங்களை நாங்கள் பார்த்து கொள்வோம். கவலைப்படாமல் இருங்கள்" என உருக்கமாக கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், "மாநிலம் முழுவதும் மலையடிவாரங்களில் வசிக்கும் மக்களை நிரந்தரமாக மாற்று இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கு மராட்டியத்தில் ஆறுகளில் நீர்மட்டம் கூடுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. எனவே அதை தடுக்க நீர்மேலாண்மை திட்டம் வகுக்கப்படும். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் " என்றார்.


Next Story