மராட்டியத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம்; 112 பேரின் உடல்கள் மீட்பு; 99 பேர் மாயம்


மராட்டியத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம்; 112 பேரின் உடல்கள் மீட்பு; 99 பேர் மாயம்
x
தினத்தந்தி 25 July 2021 12:48 AM IST (Updated: 25 July 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம் காரணமாக பலியான 112 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. மேலும் 99 பேர் மாயமாகி உள்ளனர். மீட்பு பணியில் நெஞ்சை உருக்கம் காட்சிகள் கண்ணீரை வரவழைத்தன.

மழை வெள்ளத்தால் பேரழிவு
மராட்டியத்தில் பெய்து வரும் பருவமழை கடந்த புதன் முதல் வெள்ளிக்கிழமை வரை 3 நாட்கள் கோரமுகத்தை காட்டியது. கொங்கன் பகுதி மாவட்டங்கள் மற்றும் மேற்கு மராட்டிய மாவட்டங்களில் இந்த கனமழை இடைவிடாமல் கொட்டித்தீர்த்தது. குறிப்பாக சுற்றுலா தலமான மகாபலேஸ்வரில் 17 மணி நேரத்தில் மட்டும் 46 செ.மீ. மழை பதிவானது.இந்த பேய் மழை காரணமாக பஞ்சகங்கா உள்ளிட்ட ஆறுகள் அபாய கட்டத்தை தாண்டி கரைபுரண்டு ஓடின. இதனால் கொய்னா உள்ளிட்ட அணைகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நகர்ப்புறங்கள், கிராமப்புறங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால், மக்கள் உயிரை காப்பாற்றி கொள்ள போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்த மழை வெள்ளத்துக்கு மாநில தலைநகர் மும்பை அருகே உள்ள தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் மற்றும் கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா, புனே, நாக்பூர் போன்ற மாவட்டங்கள் பேரழிவை சந்தித்தன.

நிலச்சரிவு தந்த துயரம்
இங்குள்ள மலைப்பிரதேச பகுதிகளில் மிதமிஞ்சிய மழையால் நூற்றுக்கணக்கான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ராய்காட் மாவட்டம் மகாட் தாலுகா தலாய் கிராமத்தில் பெருந்துயரம் ஏற்பட்டது. அந்த கிராமத்தில் இருந்த 30 வீடுகள் நிலச்சரிவால் மண்ணோடு மண்ணாக புதைந்தன. இதில் சிக்கி கொண்டவர்களில் 41 பேரை நேற்று வரை பேரிடர் மீட்பு படையினர் பிணமாக மீட்டு உள்ளனர்.இதில் நெஞ்சை உருக்கும் சோகமாக மண்ணில் புதைந்து உயிரிழந்து கிடந்த 7 மாத ஆண் குழந்தையின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அமைந்தது. குழந்தையின் குடும்பத்தினர் கதறி அழுதது 
பரிதாபமாக இருந்தது.இதேபோல பலரின் உடல்கள் மீட்கப்பட்ட காட்சிகள் இதயத்தை உறைய வைத்தது.ராய்காட் மாவட்டத்தில் மட்டும் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்கள் என 52 பேர் உயிரை பறிகொடுத்து உள்ளனர்.

சத்தாரா
இதேபோல சத்தாரா மாவட்டத்தில் உள்ள அம்பேகர் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 வீடுகள் மண்ணில் புதைந்தன. இங்கு இருந்து 11 பேர் பிணமாக மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் இதே மாவட்டத்தில் உள்ள தோகவாலா கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 உடல்கள் மீட்கப்பட்டன. மிர்காவ் கிராம நிலச்சரிவில் மீட்பு பணி நடந்து வருகிறது.இந்த மாவட்டத்தில் 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

112 பேரின் உடல்கள் மீட்பு
இதற்கிடையே நேற்று வரை நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களில் 112 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாக துணை முதல்-மந்திரி அஜித்பவார் தெரிவித்தார். மேலும் 99 பேர் மாயமாகி இருப்பதாகவும் அவர் கூறினார். மாயமானவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.நேற்று முன்தினம் 129 பேர் உயிரிழந்ததாக பேரிடர் மேலாண்மை நிர்வாகத்துறை தெரிவித்து இருந்தது. எனவே மாயமானவர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுதவிர காயங்களுடன் 38 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.

முழு வீச்சில் முப்படை
இன்னும் வெள்ளம் வடியாததால் பல நகரங்கள், கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. வெள்ளத்தில் மிதக்கும் ஊர்களில் தவிப்பவர்களை மீட்கும் பணியில் 34 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் களமிறங்கி உள்ளனர். ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளும் மீட்பு பணியில் மும்முரம் காட்டி உள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வீட்டு மேற்கூரை, மொட்டை மாடிகளில் தவிப்பவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்படுகின்றனர். மேலும் ஆள் உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கும் நகர, கிராம வீதிகளில் படகுகள் மூலம் மீட்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.வெள்ளத்தின் பிடியில் சிக்கி தவிப்பவர்களுக்கு குடிநீர், உணவு மற்றும் மருந்து வழங்குவது அரசுக்கு தற்போது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த பணிகளில் முப்படைகள் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் தீவிரம் காட்டி உள்ளனர். வெள்ள அபாய பகுதிகளில் இருந்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். அவர்கள் தனியார் அரங்குகள், பள்ளி கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையே பஞ்சகங்கா நதியில் வெள்ளம் சற்று தணிந்து இருக்கிறது. இது மக்களுக்கு சற்று ஆறுதலை தந்து உள்ளது. எனினும் பேரழிவை சந்தித்த நகரங்கள், கிராமங்களை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.

அரசு நிவாரணம்
இதற்கிடையே வெள்ள பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மராட்டிய அரசு சார்பில் தலா ரூ.5 லட்சமும், மத்திய அரசு சார்பில் தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story