நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்று சேருவோம்; நாட்டு மக்களுக்கு மோடி அழைப்பு


நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்று சேருவோம்; நாட்டு மக்களுக்கு மோடி அழைப்பு
x
தினத்தந்தி 25 July 2021 10:55 PM IST (Updated: 25 July 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்று சேருவோம் என்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

‘ஒலிம்பிக் வீரர்களை ஊக்குவிப்போம்’
பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களிடம் ‘மன்கி பாத்’ என்று அழைக்கப்படுகிற ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி வாயிலாக பேசி வருகிறார்.

அந்த வகையில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் நேற்று அவர் பேசியதாவது:-

சில தினங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட சில அற்புதமான படங்கள், சில மறக்க முடியாத தருணங்கள் இன்னும் என் கண்களில் நிழலாடுகின்றன. அந்த தருணங்களுடன் இந்த ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியைத் தொடங்குவோம். டோக்கியோ ஒலிம்பிக்கில், நமது மூவர்ணக்கொடியை இந்திய விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பில் சுமந்து சென்றதை பார்த்தபோது என்னை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டையும் உற்சாகப்படுத்தியது. அந்த விளையாட்டு வீரர்கள் இந்தியாவில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது, அவர்களோடு பேசுகிற வாய்ப்பை நான் பெற்றேன். அவர்களைப் பற்றி அறிந்து கொண்டேன். அதை நாட்டுக்கும் தெரிவித்தேன். இவர்கள் எல்லாம் எண்ணிலடங்கா தடைகளைத் தாண்டித்தான் இன்றைக்கு அவர்கள் இருக்கிற இடத்தை அடைந்திருக்கிறார்கள். இன்றைக்கு அவர்கள் நமது அன்பையும், ஆதரவின் வலிமையையும் சுதந்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு நமது நல்வாழ்த்துகளைத் தெரிவிப்போம். அவர்களை ஊக்குவிப்போம். சமூக ஊடகங்களில், ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள வீரர்களின் வெற்றிக்கான ஆதரவு பிரசாரம் தொடங்கி விட்டது. நீங்களும் உங்கள் குழுவினருடன் வாழ்த்தை பகிர்ந்து கொள்ளுங்கள். இந்தியாவுக்காக உற்சாகம் காட்டுங்கள்.

நாளை  கார்கில் வெற்றி தினம்
நாளை ஜூலை 26-ந் தேதி கார்கில் வெற்றி தினத்தை கொண்டாடுகிறோம். இந்த கார்கில் போர், இந்திய ஆயுதப்படைகளின் துணிச்சலுக்கும், பொறுமைக்கும் அடையாளம் ஆகும். இதை ஒட்டுமொத்த உலகமும் பார்த்தது.இந்த ஆண்டு, இந்த கார்கில் வெற்றி தினம் அமிர்த மகோத்சவுடன் இணைந்து கொண்டாடப்படுகிறது. எனவே இந்த நாள் இன்னும் சிறப்பானது. கார்கிலின் துணிச்சலான இதயங்களுக்கு நாம் அனைவரும் தலை வணங்குவோம்.

75-வது சுதந்திர ஆண்டு
ஆகஸ்டு 15-ந் தேதி, நாடு தனது 75-வது சுதந்திர ஆண்டில் நுழைகிறது. 75-வது ஆண்டு சுதந்திர ஆண்டை நினைவுகூரும் வகையில் அமிர்த மகோத்சவ் நடக்கிறது. மார்ச் 12-ந் தேதியன்று மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து இது தொடங்கியது. இந்த நாளிலே மகாத்மாவின் தண்டி யாத்திரையும் புத்துயிர் பெற்றது.நமது நாட்டில் சுதந்திரப்போராளிகள் பங்களிப்பு மிகப்பெரியது. ஆனால் இது போதுமான அளவில் விவாதிக்கப்படவில்லை. இன்று மக்கள் அவற்றைப்பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. உதாரணத்துக்கு, இப்போது மொய்ராங் தினத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மணிப்பூரில் உள்ள சிறிய நகரமான மொய்ராங் ஒரு காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவமான ஐ.என்.ஏ.வின் முக்கிய தளமாக இருந்தது. இங்கு நாட்டு விடுதலைக்கு முன்பாகவே ஐ.என்.ஏ.யின் கர்னல் சவுக்கத் மாலிக் கொடியேற்றி விட்டார்.அமிர்த மகோத்சவ்வின்போது, ஏப்ரல் 14-ந் தேதியன்று, அதே மொய்ராங்கில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது. அமிர்த மகோத்சோவின் போது, இதுபோன்ற எண்ணற்ற சுதந்திர போராளிகள் மற்றும் மாபெரும் மனிதர்கள் நினைவுகூரப்படுகிறார்கள்.

‘நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்று சேருவோம்’
இதே போன்றதொரு நிகழ்வு, ஆகஸ்டு 15-ந் தேதி இந்த முறை நடக்கப்போகிறது. அது தேசிய கீதத்துடன் தொடர்புடைய ஒரு முயற்சி. இதற்காக ஒரு வலைத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. அது ராஷ்ட்ரகன்.இன் ஆகும். இதன் உதவியுடன் நீங்கள் தேசிய கீதத்தை பாடி பதிவு செய்ய முடியும். அதன்மூலம் நீங்கள் இந்த முயற்சியில் உங்களை இணைத்துக் கொள்ளலாம்.சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்கள் கை கோர்த்ததுபோல, நாட்டின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும். நாம் நாட்டுக்காக வாழ வேண்டும். நாம் நாட்டுக்காக உழைக்க வேண்டும். இதனால் சிறிய முயற்சிகள் கூட மிகப்பெரிய பலன்களைத்தரும்.பன்முகத்தன்மையால் நிறைந்திருக்கும் இந்தியாவை பிணைப்பதற்கு உதவுவதை உறுதி செய்வது நமது கடமை ஆகும். வாருங்கள், அமிர்த மகோத்சவ் அன்று நாடு நமது உயர்ந்த நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்று தீர்மானிப்போம். நமது முன்னுரிமை முதலில் தேசமாக இருக்க வேண்டும். எப்போதும் தேசம் முதலில் இருக்க வேண்டும் என்பதை மந்திரமாகக்கொண்டு நாம் பீடுநடை போட்டு முன்னேறிச் செல்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story