கர்நாடகத்தில் இன்று கல்லூரிகள் திறப்பு


கர்நாடகத்தில் இன்று கல்லூரிகள் திறப்பு
x
தினத்தந்தி 25 July 2021 11:55 PM GMT (Updated: 25 July 2021 11:55 PM GMT)

கொரோனா பரவல் குறைந்திருப்பதை தொடர்ந்து கர்நாடகத்தில் இன்று (திங்கட்கிழமை) கல்லூரிகள் திறக்கப்படுகிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. கொரோனா காரணமாக பி.யூ.சி. 2-வது ஆண்டு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு இருந்தது. ஆனால் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.

இந்த நிலையில், மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் 26-ந் தேதியில் (அதாவது இன்று) இருந்து கல்லூரிகளை மட்டும் திறக்க அரசு முடிவு செய்து, அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. பட்டப்படிப்பு, என்ஜினீயரிங் உள்ளிட்ட கல்லூரிகள் திறக்கப்பட இருப்பதாக உயர்கல்வித்துறை மந்திரியும், துணை முதல்-மந்திரியுமான அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.

கல்லூரிகள் இன்று திறக்கப்படுவதையொட்டி மாநிலத்தில் உள்ள அனைத்து கலலூரிகளும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் இருந்து வருவதால் ஆன்லைன் மூலமாகவும் பாடங்கள் நடத்தப்பட இருக்கிறது. அதுபோல், மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு நேரிடையாக வந்தும் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.

கொரோனா காரணமாக ஒரு வகுப்பு அறையில் 30 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. வகுப்பறையில் மாணவ, மாணவிகள் சமூக இடைவெளி விட்டு அமருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் 80 சதவீதம் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பிற அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகவும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story