ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்து வருகின்றன - மத்திய அரசு


ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்து வருகின்றன - மத்திய அரசு
x
தினத்தந்தி 29 July 2021 5:41 AM IST (Updated: 29 July 2021 5:41 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை முழுதுமாக திரும்பிய பிறகு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என மத்திய அரசு கூறி உள்ளது.

புதுடெல்லி,

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி நீக்கப்பட்டது. இந்த மாநிலம் ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என  எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்தநிலையில்  இது தொடர்பான கேள்விகளுக்கு மக்களவையில் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய உள்துறை இணை மந்திரி  நித்யானந்த ராய் கூறியுள்ளதாவது:

முழுமையாக அமைதி திரும்பிய உடன் உரிய நேரத்தில் ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும். ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்து வருகின்றன. கடந்த, 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகை யில், 2020ல் பயங்கர வாத சம்பவங்கள் 59 சதவீதம் குறைந்து உள்ளது. 

இந்தாண்டில், ஜூன் மாதம் வரையிலான காலத்தில் 32 சதவீதம் குறைந்துள்ளது. காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட காஷ்மீரி பண்டிட்களை மீண்டும் குடியமர்த்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்குள்ள காஷ்மீரி பண்டிட் மற்றும் டோக்ரா ஹிந்து பிரிவைச் சேர்ந்த, 900 குடும்பங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்றார்.

Next Story