தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள் விகிதம் 69.2%; ஆய்வில் தகவல்


தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள் விகிதம் 69.2%; ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 29 July 2021 9:02 AM GMT (Updated: 29 July 2021 9:02 AM GMT)

தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள் விகிதம் 69.2% என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

புதுடெல்லி,

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது இரண்டு வகையில் பெறப்படுகிறது.  ஒன்று இயற்கையானது. மற்றொன்று செயற்கையானது.  நோய் பாதிப்பு ஏற்படும்போது அதனை எதிர்க்க உடலிலுள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு போரிடும் செல்களை உருவாக்கும். இந்த செல்கள் உள்ளே நுழைந்துள்ள கெட்ட வைரசுகளை அழிக்கும். இதன் காரணமாக நோய் விட்டு போகும்.  இது இயற்கையானது.

இதேபோன்று, தடுப்பூசி செலுத்தும்போது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்பட்டு ஆன்டிபாடிகள் உருவாகும். பின்னர் வைரசுகளை அவை அழிக்கும். அதனால் தான் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.

இயற்கையாக உருவாகும் ஆன்டிபாடிகளை விட தடுப்பூசி மூலம் உருவாகும் ஆன்டிபாடிகளே அதிக காலம் நம் உடலில் இருக்கின்றன. இயற்கை முறையில் நான்கு மாதங்கள் நீடித்தால், தடுப்பூசி முறையில் ஒரு வருடம் நீடிக்கிறது. கொரோனாவுக்கு எதிராகவும் இதுபோன்ற ஆன்டிபாடிகள் உருவாகியிருக்கும்.

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் உடலில் இந்த வகை ஆன்டிபாடிகள் தோன்றியிருக்கும். இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை மக்கள் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றலை பெற்றுள்ளார்கள் என்று ஆய்வு செய்யப்பட்டது.

இந்தியா முழுவதும் 70 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பரிசோதிக்கப்பட்ட்டனர். 11 மாநிலங்களில் குறைந்தது 3ல் இரு பங்கு மக்கள் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை (ஆன்டிபாடி) பெற்றுள்ளனர் என்பது ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

இவற்றில் அதிக அளவாக மத்திய பிரதேசத்தில் 79% மக்கள் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகளை பெற்றுள்ளனர்.  இதில் மிக குறைவாக கேரளாவில் 44.4% மக்கள் மட்டுமே நோய் எதிர்ப்பு ஆற்றலை பெற்றுள்ளனர்.  இந்த விகிதம் தமிழகத்தில் 69.2% என்ற அளவில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story