புதுவையில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.6½ கோடி: புதுச்சேரி கவர்னர்


புதுவையில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.6½ கோடி: புதுச்சேரி கவர்னர்
x
தினத்தந்தி 31 July 2021 12:57 AM GMT (Updated: 31 July 2021 12:57 AM GMT)

கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.6½ கோடியே ஒதுக்கீடு செய்ய கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுவை கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரூ.6½ கோடிக்கு ஒப்புதல்
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி கொரோனா அவசர கால உதவி மற்றும் மருத்துவ முன்னேற்பாடுகளின் கீழ் நோய்த்தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் கொள்முதல், ஆய்வகங்கள் அமைத்தல், உயிரி பாதுகாப்பு உள்ளிட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளுக்காக புதுவை மாநில சுகாதார சங்கத்திற்கு 2021-22-ம் ஆண்டிற்கான நிதி உதவியாக ரூ.6.50 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த மருத்துவ சேவையை சிறப்பாக செயல்படுத்தும் விதமாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதாரம் மற்றும் நல மையங்கள் திறக்க, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல சேவைகள் இயக்குனரகம் இடையில் துறை ரீதியிலான ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான சுகாதாரத்துறையின் திட்ட வரைவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

பல் மருத்துவக்கல்லூரி
நீட் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் 2 சுற்று நேர்காணலுக்கு பிறகு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ கல்லூரியில் வெளிநாட்டு வாழ் இந்தியருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் மீதமுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான சுகாதாரத்துறையின் திட்ட வரைவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.இந்த இடங்களுக்கான கட்டணம், புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணத்தை ஒத்து இருக்கும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story