டெல்லியில் 1 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக முதல் மந்திரி கெஜ்ரிவால் தகவல்

டெல்லியில் இதுவரை 1 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பெரும்பாலான மக்கள் ஆர்வம் காட்டாமல் இருந்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர முயற்சிகளால் தற்போது பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்கின்றனர்.
அந்த வகையில் தலைநகர் டெல்லியில் இதுவரை மொத்தம் 1 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். இதில் 74 லட்சம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாகவும், 26 லட்சம் பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
டெல்லியிலுள்ள 2 கோடி மக்கள்தொகையில் 1.5 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் என்றும் 74 லட்சம் பேர் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்திக்கொண்டிருப்பது டெல்லி மக்கள்தொகையில் 50 சதவிகிதம் என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்றைய தினம் புதிதாக 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 56 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story