சுற்றுலாவுடன் தொடர்புடையவர்களுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை; மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்


சுற்றுலாவுடன் தொடர்புடையவர்களுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை; மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 1 Aug 2021 11:53 PM GMT (Updated: 1 Aug 2021 11:53 PM GMT)

சுற்றுலாவுடன் தொடர்புடைய ஓட்டல் ஊழியர்கள், டிரைவர்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு கூறியுள்ளது.

சுற்றுலா பாதிப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டு ெதாடக்கத்தில் கொரோனா வைரஸ் தலைகாட்டியவுடன் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும் அத்துறை கேள்விக்குறியானது.
கோடிக்கணக்கானோர் வேலை இழந்தனர். கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன. அதனால், சுற்றுலா துறையில் ஏற்றம் காணப்பட்டது. ஆனால், கொரோனா இரண்டாவது அலை தொடங்கியவுடன், அத்துறை மீண்டும் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு மத்திய அரசு கடனுதவி அறிவித்த போதிலும், அவர்கள் முழு திருப்திஅடையவில்லை.
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி உயர்வதாலும் சுற்றுலா துறை பழைய நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பிக்கை பிறக்கும்

இந்த நிலையில், இந்தோ-அமெரிக்க வர்த்தக பேரவை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், மத்திய சுற்றுலாத்துறை செயலாளர் அரவிந்த்சிங் ேபசியதாவது:- 

சுற்றுலா செல்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதையே விரும்புவார்கள். தாங்கள் சந்திக்கும் நபர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால், அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.ஆகவே, சுற்றுலாவுடன் தொடர்புடைய சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், ஓட்டல் ஊழியர்கள், டிரைவர்கள், ஓட்டல் நிர்வாகிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடுமாறு அனைத்து மாநிலங்களையும் கேட்டுக்கொண்டுள்ளோம். சுற்றுலா துறைக்கு புத்துயிரூட்ட இது அவசியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story