சுற்றுலா தலங்களில் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் - டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் அறிவுரை


சுற்றுலா தலங்களில் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் - டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் அறிவுரை
x
தினத்தந்தி 2 Aug 2021 1:26 AM GMT (Updated: 2021-08-02T06:56:16+05:30)

சுற்றுலா தலங்களில் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். கூட்டம் கூடினால் வைரஸ் பரவலுக்கு வழிவகுத்துவிடும்.

புதுடெல்லி,

நமது நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது பெரிய அளவு மாற்றமில்லாமல் சுமார் 41 ஆயிரம், 42 ஆயிரம் பேருக்கு தினமும் தொற்று உறுதியாகி வருகிறது. 

இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் ரன்தீப் குலேரியா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இந்தியாவில் ஜைடஸ் கெடில்லா உள்ளிட்ட நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகள் விரைவில் அறிமுகமாக உள்ளன. இந்த நேரத்தில் அனைத்து தரப்பு மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.

இப்போதைய நிலையில் கொரோனா அச்சுறுத்தல் ஓயவில்லை. இந்த சூழ்நிலையில் சுற்றுலா தலங்களில் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். கூட்டம் கூடினால் வைரஸ் பரவலுக்கு வழிவகுத்துவிடும். முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடுதலாக ஒரு தவணை கொரோனா தடுப்பூசி கூட போட்டுக் கொள்ளலாம் என்று பல்வேறு நிபுணர்கள் கூறி வருகின்றனர். இது அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இந்த சூழலில் ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 3-வது தவணை தடுப்பூசி போடுவது ஏற்புடையது கிடையாது. உலகம் முழுவதும் அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி போடப்பட்டால் மட்டுமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story