‘இ-ரூபி’ ரசீது முறை பண பரிமாற்ற வசதி; மோடி அறிமுகப்படுத்தினார்


‘இ-ரூபி’ ரசீது முறை பண பரிமாற்ற வசதி; மோடி அறிமுகப்படுத்தினார்
x
தினத்தந்தி 3 Aug 2021 1:21 AM GMT (Updated: 2021-08-03T06:51:39+05:30)

இ-ரூபி’ ரசீது முறை பண பரிமாற்ற வசதி; மோடி அறிமுகப்படுத்தினார். இ-ரூபி என்ற ரசீது முறை பண பரிமாற்ற வசதியை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் ஆகியவை இல்லாமல் இதை பயன்படுத்தலாம்.

‘இ-ரூபி’ ரசீது முறை பண பரிமாற்ற வசதி; மோடி அறிமுகப்படுத்தினார். இ-ரூபி என்ற ரசீது முறை பண பரிமாற்ற வசதியை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் ஆகியவை இல்லாமல் இதை பயன்படுத்தலாம்.

இ-ரூபி
கடந்த சில ஆண்டுகளாக இணையவழி பண பரிமாற்றம் அதிகரித்து வருகிறது. ‘யு.பி.ஐ.’ என்ற இணையவழி பண பரிமாற்ற வசதியை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. ‘பீம்’ என்ற செயலியையும் இதற்காக அறிமுகப்படுத்தி உள்ளது.தான் அளிக்கும் நலத்திட்ட உதவிகள், மானியம் ஆகியவை பயனாளிகளுக்கு சரியாக சென்றடைய நேரடியாக வங்கிக்கணக்கில் மத்திய அரசு செலுத்தி வருகிறது. இதனால், ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மிச்சமாகிறது. இடைத்தரகர்கள், அதிகாரிகள் தலையீடு இல்லாமல் பணம் நேரடியாக பயனாளியை சென்றடைகிறது.இதன் அடுத்தகட்டமாக, பயனாளிகளுக்கான பண பரிமாற்றத்தை மேலும் எளிமைப்படுத்த ‘இ-ரூபி’ என்ற ரசீது முறை பண பரிமாற்ற வசதி உருவாக்கப்பட்டுள்ளது. நிதிச்சேவைகள் துறை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தேசிய சுகாதார ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய தேசிய பண பட்டுவாடா கழகம் இதை உருவாக்கி உள்ளது.

மோடி அறிமுகம்

பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த வசதியை அறிமுகப்படுத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

டிஜிட்டல் நிர்வாகத்தில் இந்தியா இன்று புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. இ-ரூபி ரசீது, மின்னணு பண பரிமாற்றத்தையும், நேரடி பணப்பலன் செலுத்தும் முறையையும் மேலும் ஆக்கப்பூர்வமாக மாற்றிவிடும். யாருக்கு பணம் 
கொடுக்கிறோமோ, அது ஒளிவுமறைவின்றி, எந்த கசிவும் இன்றி உரிய நபரை சென்றடைய உதவும்.அரசு மட்டுமின்றி, பொது அமைப்புகளோ, தனியார் அமைப்புகளோ யாருக்கேனும் மருத்துவ சிகிச்சை, கல்வி மற்றும் இதர பணிகளுக்கு உதவ நினைத்தால், பணமாக அளிப்பதற்கு பதிலாக, இந்த ரசீதை வாங்கி கொடுக்கலாம்.இதன்மூலம், எந்த பணிக்காக தொகைைய செலுத்தினோமோ, அந்த பணிக்கு மட்டும் அது பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய முடியும்.

ரூ.1.78 லட்சம் கோடி மிச்சம்
மத்திய அரசின் சுமார் 300 திட்டங்களில், பயனாளிகளுக்கு வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது. இதுவரை இப்படி ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது.வங்கிக்கணக்கில் பணம் செலுத்துவதால், போலி பயனாளிகள் ஒழிக்கப்பட்டதுடன், இடைத்தரகர்களுக்கு பணம் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. இதனால், தவறானவர்கள் கைக்கு செல்லாமல் ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

எப்படி செயல்படும்?
இ-ரூபி வசதிப்படி, பயனாளியின் செல்போனுக்கு குறிப்பிட்ட தொகைக்கான மின்னணு ரசீது (வவுச்சர்) அனுப்பப்படும். குறுஞ்செய்தியாகவோ அல்லது க்யுஆர் கோடாகவோ அவருக்கு அந்த மின்னணு ரசீது வந்து சேரும்.தான் பெறும் சேவையை அளிக்கும் அமைப்பிடம் அந்த ரசீது விவரங்களை தெரிவித்தால் போதும். சேவையை பெற்றவுடன், அதை பயனாளிகள் உறுதி செய்ய வேண்டும். அவர்கள் உறுதி செய்த பிறகுதான், சம்பந்தப்பட்ட அமைப்புக்கு மத்திய அரசு பண பரிமாற்றத்தை செய்யும். இதனால், எந்த இடத்திலும் மோசடி நடக்க வாய்ப்பில்லை.தனிநபர்களும் இதை பயன்படுத்தலாம். ஒருவர் யாருக்காவது மருத்துவம், கல்வி போன்ற பணிகளுக்கு பணஉதவி செய்ய விரும்பினால், முன்கூட்டியே இணையவழியில் பணம் செலுத்தி, இந்த மின்னணு ரசீதை (வவுச்சர்) பெற்றுக் கொள்ளலாம்.யாருக்கு உதவ விரும்புகிறோமோ, அவரிடம் அந்த ரசீதில் உள்ள நம்பரை அளிக்கலாம்.அவர் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியிலோ, கல்வி 
நிறுவனங்களிலோ அந்த ரசீது விவரங்களை தெரிவித்தால், அதிலிருந்து பணம் கழித்துக் கொள்ளப்படும்.

கார்டு தேவையில்லை
இந்த பண பரிமாற்றத்துக்கு ஏ.டி.எம்., கிெரடிட் கார்டுகளோ, நெட் பேங்கிங் வசதியோ தேவையில்லை. ரசீதில் உள்ள விவரங்களை அளித்தாலே போதும். இந்த முறை, மின்னணு பண பரிமாற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று 
எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்கத்தில், மருத்துவ சேவைகளுக்கும், உர மானியத்துக்கும் மட்டும் இ-ரூபி வசதி அனுமதிக்கப்படுகிறது. பின்னர், மற்ற பணிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

Next Story