கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு குறைப்பு


கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு குறைப்பு
x
தினத்தந்தி 4 Aug 2021 7:01 PM GMT (Updated: 4 Aug 2021 7:01 PM GMT)

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

மைசூரு,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன. 

குறிப்பாக மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ். அணை வேகமாக நிரம்பி வருகிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும். நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6,287 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2,014 கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 115.44 அடியாக இருந்தது.

இதேபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 2,284 அடி(கடல் மட்டத்தில் இருந்து) ஆகும். நேற்று காலை நிலவரப்படி அணையில் 2,280.61 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5,077 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகத்திற்கு செல்கிறது. அதேபோல் நேற்று இவ்விரு அணைகளில் இருந்தும் மொத்தம் வினாடிக்கு 3,014 கன அடி நீர் தமிழகத்திற்கு காவிரியில் சென்றது குறிப்பிடத்தக்கது.

Next Story