கிருஷ்ணா நதி நீர் பங்கீடு வழக்கு விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி விலகல்


கிருஷ்ணா நதி நீர் பங்கீடு வழக்கு விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி விலகல்
x
தினத்தந்தி 4 Aug 2021 11:58 PM GMT (Updated: 4 Aug 2021 11:58 PM GMT)

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஆந்திர மாநிலத்துக்கு பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் சட்டப்படி திறந்து விடவேண்டிய கிருஷ்ணா நீரை தெலுங்கானா திறக்கவில்லை என்று தெரிவித்து தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.

ஆந்திர மாநில அரசு சார்பில் வக்கீல் உமாபதி ஆஜராகி, ‘சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு பதிலாக, சுப்ரீம் கோர்ட்டு மூலமே தீர்வுகாண ஆந்திர அரசு விரும்புகிறது’ என்று வாதிட்டார். அப்போது தலைமை நீதிபதி, ‘அப்படியென்றால் இந்த மனுவை வேறொரு அமர்வு விசாரிக்கட்டும். சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்பவில்லை என்றால், வற்புறுத்தவில்லை. இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை’ என தெரிவித்தார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்க எவ்வித ஆட்சேபனையும் இல்லை. முழு நம்பிக்கையும் உள்ளது’ என தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தலைமை நீதிபதி ‘நன்றி’ என தெரிவித்தார்.

Next Story